Published : 26 Feb 2014 06:19 PM
Last Updated : 26 Feb 2014 06:19 PM

தமிழகத்தில் தூங்கி வழிகிறது காவல்துறை: ஸ்டாலின் சாடல்

சென்னை பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் காவல்துறை தூங்கி வழிவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை புறநகரில் உள்ள கேளம்பாக்கத்தில் ஐ.டி. நிறுவன சாப்ட்வேர் இன்ஜினீயர் இளம்பெண் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தன் மகளைக் காணவில்லை என்று பதறிய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அந்தப் பெண்ணின் சடலத்தை பொதுமக்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது இதயத்தில் ஈட்டிப் பாய்ச்சுவது போலிருக்கிறது.

"அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கொள்ளையர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடி விட்டார்கள்" என்று தம்பட்டம் அடித்தார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் இன்று பத்திரிக்கைகளை புரட்டினால் கொலை, கொள்ளைகளைப் போடுவதற்கே பக்கங்கள் போதாது போலிருக்கிறது. அந்த அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. குற்றங்களை "இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய" காவல்துறை துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவோ அதிநவீன கருவிகள் வந்த பிறகும், தமிழக காவல்துறை அ.தி.மு.க. ஆட்சியில் கற்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த "சாப்ட்வேர் இன்ஜினீயர்" விஷயத்தில் கூட உமா மகேஸ்வரி சடலம் மீட்கப்பட்ட பிறகு ஆளில்லா விமானம் மூலம் எல்லாம் தேடுதல் வேட்டையாடும் காவல் துறை, புகார் கொடுத்தவுடன் அவரை தேட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு விளக்கம் ஏதுமில்லை. அப்படி ஒருவேளை உடனடியாக தேடியிருந்தால், அந்த இளம் சாப்ட்வேர் இன்ஜீனியரை காப்பாற்றியிருக்கலாம்.

ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகள் வெளியே போனால் திரும்பி வரும் வரை தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பீதியில் வாழும் சூழல்தான் இன்று நிலவுகிறது. இதுதான் "அம்மா" சொல்லும் "அமைதி".

மின்வெட்டு பிரச்சினை

"வானத்தில்தான் மின்வெட்டு" என்பதை 2001-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தேய்ந்து போன ரிக்கார்டு போல் திரும்பத் திரும்ப அ.தி.மு.க.வினர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. தீட்டிய மின்திட்டங்களைக் கூட ஒழுங்காக நிறைவேற்றாமலும், அதில் துளி கூட அக்கறை செலுத்தாமலும் மூன்று வருடத்தை கழித்து விட்டார்கள். இன்று மின்வெட்டுப் பிரச்சினையை தீர்க்க முடியாமல் அ.தி.மு.க. அரசு தள்ளாடிக் கொண்டிருப்பதைப் வாக்களித்த மக்கள் மிகுந்த வேதனையுடன் பார்க்கிறார்கள்.

"மாற்றத்தை" நம்பி ஓட்டுப் போட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கே "வேட்டு" வைத்ததுதான் இந்த மூன்றாண்டுகளில் அ.தி.மு.க. செய்த மாபெரும் சாதனை. கடுமையான மின்வெட்டால், தமிழகத்திற்கு வரவிருந்த 19 பன்னாட்டு நிறுவனங்கள் தலை தெரிக்க வேறு மாநிலங்களுக்கு ஓடிவிட்டன. ஜெயலலிதாவோ, "விஸன்-2023- II" என்று பெயரிட்ட ஆடம்பர விழா நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட்டு ஒரு சர்வேயை மத்திய புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது.

அதில் மாநில பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 2012-13-ல் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 2010-2011-ல் தி.மு.க. ஆட்சியில் தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நான்காவது இடத்தில் இருந்த தமிழகம், 2011-2012-ல் ஜெயலலிதா ஆட்சியில் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. அதுவே 2012-2013-ல் 14 வது இடம் என்று போய் விட்டது. இதைத்தான் "அம்மா" பாணியில் "வளர்ச்சி" என்கிறார்கள் போலும்!

இந்திய அளவில் "லஞ்ச ஊழலுக்கு" எதிரான பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் தமிழகத்தில் எல்லா மட்டத்திலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அ.தி.மு.க.வினர் மட்டுமே "வளம்" பெறும் விதத்தில் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதைத்தான் "வளமை" என்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதாவின் இந்த முழக்கம், "இல்லாத கறுப்புப் பூனையை இருட்டில் தேடுவது போல்தான்" என்று சொன்னால் "அக்மார்க்" பொருத்தமாகவே இருக்கும். அவர் பாணியிலேயே, அ.தி.மு.க. ஆட்சியை விளம்பரப்படுத்துவது என்றால் "எல்லாம் வெற்று அறிவிப்பு, எங்கும் அமைதியின்மை, எதிலும் ஊழல்" என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் தாரக மந்திரம்" என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x