Published : 26 Jan 2014 09:53 AM
Last Updated : 26 Jan 2014 09:53 AM
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 புலிகள் உயிரிழந்ததால், புலிகள் பாதுகாப்பு திட்டம் தொய்வடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
உதகையில் 3 பேரையும், இரண்டு மாடுகளையும் கொன்ற மனித வேட்டைப் புலி கடந்த 22-ல் சுட்டுக் கொல்லப்பட்டது. இந்நிலையில் தெங்குமரஹாடா கிராமம் அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் கல்லம்பாளையம் வனப் பகுதியில் கடந்த 20-ல் பெண் புலி இறந்தது. இதேபோல, வடக்கு வனக்கோட்டம், சீகூர் சரகத்துக்குட்பட்ட மாயார் பகுதி யில் மேலும் ஒரு பெண் புலி இறந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 69 புலிகள் உள்ளன. வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சிங்காரா, சீகூர் வனச்சரகங்களில் 19 புலிகள் உள்ளன. ஒரு ஆண் புலி 25 சதுர கி.மீ. வனப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். பெண் புலிகள் 5 சதுர கி.மீ. பரப்பில் வசிக்கும். இப்பகுதிகளில் பிற புலிகள் ஊடுருவினால், ஆளுமை காரணமாக புலிகளிடையே ஏற்படும் சண்டையில் பலவீன மான புலி துரத்தப்படும்; சில நேரங்களில் கொல்லப்படும்.
ஒரு வாரத்தில் 3 புலிகள் இறந்துள்ளது இயற்கை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலிகளின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதும், உணவுப் பற்றாக்குறை ஆகியவையே புலிகள் இறக்கக் காரணம். இறந்த புலிகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. வனப்பரப்பில் அடர்த்தி குறைந்து புல் மற்றும் பசுந்தீவனங்கள் பற்றாக்குறையால் மான் உள்ளிட்ட விலங்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.
வளர்ச்சிப் பணிகளுக்காக வனத்தையொட்டிய பகுதிகள், வனங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் புலிகளின் வசிப்பிடம் குறைந்துவிட்டது. இதனால் இருக்கும் இடத்தில் வசிக்க புலிகளிடையே மோதல் ஏற்படுகிறது என நீலகிரி சுற்றுச்சூழல் - சமூக கலாச்சார அறக்கட்டளை நிறுவனர் சிவதாஸ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT