Published : 19 Mar 2017 12:18 PM
Last Updated : 19 Mar 2017 12:18 PM
பஞ்சு, நூல் மற்றும் ஜவுளி உற்பத்தியில் இந்தியாவிலேயே முன்னணியில் இருந்ததால் கோவையை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கூறுவர். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக ஜவுளித் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. தமிழகத்தை ஆண்ட கட்சிகள் உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என்று புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் தற்போது 2.50 கோடி நூற்பாலை கதிர்கள் இயங்குகின்றன. இந்தியாவில் இயங்கும் கதிர்களின் எண்ணிக்கையில் இவை 47 சதவீதமாகும். இதேபோல, ஓப்பன் எண்ட் இயந்திரங்களில் 4 லட்சம் கதிர்கள் இயங்குகின்றன. சுமார் 5 லட்சம் பேல் முதல் 6 லட்சம் பேல் வரை பருத்தி விளைச்சல் உள்ளது.
ஏற்கெனவே 2 சதவீத மத்திய விற்பனை வரி விதிக்கப்படும் நிலையில், 5 சதவீத வாட் வரியாலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதுதவிர, பருத்தி மற்றும் கழிவுபஞ்சு மீது விதிக்கப்படும் ஒரு சதவீத வரியாலும் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நூற்பாலையின் மொத்த லாபம் 2 முதல் 5 சதவீதம்தான் என்ற நிலையில், அதில் ஒரு சதவீதத்தை தேவையின்றி வரியாக செலுத்துவதால் பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிய ஜவுளிக் கொள்கை
இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலை உரிமையாளர்கள் சங்கத் (சைமா) தலைவர் எம்.செந்தில்குமார், செயலாளர் கே.செல்வராஜ் ஆகியோர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பல்வேறு மாநிலங்கள் புதிய ஜவுளிக் கொள்கைகளை அறிவித்து, பல சலுகைகளை வழங்குகின்றன. தெலங்கானா, ஆந்திரா, குஜராத் மாநிலங்கள் 8 சதவீதம் வரை மூலதன வட்டி மானியம் அறிவித்துள்ளன. வாட் வரியையும் திரும்பக் கொடுத்துவிடுகிறார்கள். மின்சாரம் யூனிட்டுக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை மானியம் வழங்குகின்றனர். ஆனால், சலுகைகள் வழங்கும்மாறு தமிழக அரசிடம் நாங்கள் 15 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
புதிய ஜவுளிக் கொள்கையை இன்னமும் அமல்படுத்தவில்லை. மத்திய அரசு வாட் வரியை 4 முதல் 5 சதவீதம் வரை மாநில அரசு உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவித்தவுடன், தமிழக அரசு உடனடியாக 5 சதவீதமாக உயர்த்தியது. ஜவுளித் தொழிலில் தமிழகத்துக்கு அடுத்தபடியாக உள்ள மகாராஷ்டிரம், 5 சதவீதமாக இருந்த வாட் வரியை 2 சதவீதமாக குறைத்துவிட்டது. மேற்கு வங்கத்தில் பின்னலாடை தொழிலுக்கு வாட் வரி விதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், அவர்களுடன் திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினர் எப்படி போட்டியிட முடியும்?.
தமிழகத்தில் இயங்கும் ஆலைகளுக்கு 96 சதவீத பஞ்சை, வெளிமாநிலங்களிலிருந்து வாங்குகிறோம். இதற்கான போக்குவரத்து செலவும் அதிகம். அதேபோல உற்பத்தி செய்த நூலை 60 சதவீதம் வெளி மாநிலங்களுக்கு விற்கும்போதும், போக்குவரத்து செலவு அதிகமாகிறது.
பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல மாநிலங்களில் புதிய ஜவுளிக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் நிறைய மானியம், சலுகைகளை ஜவுளி உற்பத்தியாளர்கள் பெறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் பல்வேறு குளறுபடிகளால் நூற்றுக்கணக்கான மில்கள் நலிவடைந்து, மூடப்படும் தருவாயில் உள்ளன என்றனர்.
2012-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த ஜவுளி ஆலை உரிமையாளர்கள், தமிழகத்திலும் புதிய ஜவுளிக் கொள்கையை அறிவித்து, மானியம், சலுகைகளை வழங்காவிட்டால், வேறு மாநிலங்களுக்கு சென்று தொழில் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளனர். அந்த நிலை ஏற்படாது என்று ஜெயலலிதா உறுதியளித்தாராம். தொடர்ந்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியுள்ளார். தமிழகத்தில் புதிய ஜவுளிக் கொள்கையை அறிவிப்பதாகவும், மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு சலுகைகளைத் தருவதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
“அதற்குப் பிறகு தேர்தல் வந்தது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்த பட்ஜெட்டிலாவது ஜவுளித் தொழில் சலுகைகள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை. குறைந்தபட்சம் வாட் வரியை 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைப்பார்கள் என்று கருதியிருந்தோம். ‘கழிவுப்பஞ்சு, பஞ்சு மீதான ஒரு சதவீத வேளாண் விற்பனை வரியையாவது ரத்து செய்யுங்கள்” என்று வலியுறுத்தி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனுக்கள் அனுப்பினோம். எதுவுமே நடக்கவில்லை. இதனால் ஜவுளித் தொழில் மேலும் சரிவையே சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை வரும் ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால், ஏற்கெனவே உள்ள வரிகளில் மாற்றம் செய்வதில்லை என்று கொள்கைமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதனால், இப்போதைக்கு வரிகளில் மாற்றம் செய்வதற்கில்லை என்று அரசு தெரிவித்துள்ளது. அதை ஏற்கலாம். அதேசமயம், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் கழிவுப்பஞ்சுக்கு ஒரு சதவீத வேளாண் விற்பனை வரி விதிக்கப்படுகிறது. இதைக் கூட ரத்து செய்யாதது வேதனையளிக்கிறது” என்று நூற்பாலை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஓப்பன் எண்ட் நூற்பாலைகள் சங்கத் தலைவர் ஜெயபால் கூறும்போது, “முன்பு தமிழகத்தில் அதிக அளவு பருத்தி விளைந்தது. விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பாலமாக விளங்கவும், விலை, எடையை நிர்ணயிக்கவும் வேளாண் விற்பனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அதன் சேவைக்காக குறிப்பிட்ட அளவு வரியும் வசூலிக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பருத்தி விளைச்சல் 10 சதவீதமாக சரிந்துவிட்டது. வெளி மாநிலங்களிலிருந்தே அதிக அளவு பருத்தி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுத்தமான பருத்திக்கு வரி விதிப்பது சரி. ஆனால், வெளி மாநிலத்திலிருந்து தருவிக்கப்படும் கழிவுப்பஞ்சுக்கு வேளாண் சந்தைக் குழு வரி விதிப்பது எப்படி சரியாகும்?
நாங்கள் கழிவு பஞ்சு வாங்கும்போது, மத்திய அரசு அதை ‘ஸ்கிராப்’ என்று கணக்கில்கொண்டு, அதற்காக ஒரு சதவீதம் டிடிஎஸ் வரி விதிக்கிறது. அதை வாங்கி வந்தால், இங்கு வேளாண் விளைபொருள் சந்தை வரி ஒரு சதவீதம் விதிக்கிறார்கள். எனில், நாங்கள் வாங்குவது ஸ்கிராப்பா அல்லது வேளாண் விளைபொருளா? எனவே, வேளாண் வரியை நீக்குமாறு அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். இனியாவது, இந்தக் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் எனக் கருதுகிறோம்”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT