Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM
தமிழக காவல் துறையின் சிசிடீஎன்எஸ் போர்டல் திட்டம் மூலம் கணினி வழியாக முதல் தகவல் அறிக்கை வழங்குவதற்கு நீதிமன்ற ஒப்புதலை காவல்துறை எதிர்பார்த்திருக்கிறது.
தமிழகத்தில் ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யும் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், முதல் தகவல் அறிக்கையை கையால் எழுதி அதன் நகலை புகார்தாரருக்கு வழங்குவதற்குப் பதிலாக புகாரைக் கணினியில் பதிவு செய்து அதனை பிரிண்ட் எடுத்து வழங்கும் நடைமுறையான சிசிடீஎன்எஸ் போர்டல் (க்ரைம் அண்ட் கிரிமினல் ட்ராக் நெட்வொர்க் சிஸ்டம்) எனப்படும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலைப்பின்னல் முறையும் தமிழக காவல் துறையில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
திட்டம் விரிவாக்கம்
முதலில் ஐந்து மாவட்டங் களுக்கு பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) கையால் எழுதப்படுவதுடன் கணினியிலும் அத்தகவல் பதிவு செய்யப்படும். அத்துடன் குற்றம் மற்றும் குற்றவாளிகள் குறித்த தகவல்களும் கணினியில் ஏற்றப்படுகின்றன.
இதன் மூலம் இனி தாள் உபயோகத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு 2014-ம் ஆண்டு முதல் புகார்களைக் கணினியில் மட்டுமே பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை கணினி மூலம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. மேலும் குற்றம் மற்றும் குற்றவாளி களைப் பற்றிய விவரத்தை பதிவு செய்யவும் தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் கணினி வழங்கப்பட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இரு காவலர்களுக்கு கணினி இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இத்துடன் கணினி இயக்கம் குறித்து அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களும் அறிந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டது.
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிசிடீஎன்எஸ் போர்டல் தொடங்கப்பட்டது, இதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது, இவர்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட 18 காவல் நிலையங்கள் உள்ளன.
கரூர் நகரம், பசுபதிபாளையம் ஆகிய அதிக வழக்குகளை கையாளும் காவல் நிலையங் களுக்கு 4 கணினிகளும், குளித்தலை, அரவக்குறிச்சி, வெங்கமேடு ஆகிய நடுத்தர காவல் நிலையங்களுக்கு 3 கணினிகளும், குறைந்த வழக்குகளைக் கையாளும் காவல் நிலையங்களுக்கு 2 கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து அனைத்து காவல் நிலையங்களிலும் கையால் எழுதுவதுடன் கணினி பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், நாம் இருக்கின்ற இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் புகார் செய்யலாம். இதுகுறித்து ஆன்லைன் மூலமே நடவடிக்கை விவரங்கள் தெரிவிக்கப்படும். குற்ற வாளிகளை ஆஜர்படுத்துதல், குற்றவாளிகளுக்கான காவல் நீட்டிப்பு உள்ளிட்ட பணிகளையும் கணினியில் மேற்கொள்ளலாம்.
ஒப்புதலுக்காக காத்திருப்பு
2014-ம் ஆண்டு முதல் சிசிடீஎன்எஸ் போர்டல் திட்டம் செயல்படுத்தப்பட இருந்த நிலையில், முதல் தகவல் அறிக்கையை கணினியில் ஏ4 தாளின் அளவில் வழங்கமுடியும் என்பதால், இதனை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுகுறித்து நீதிமன்றங்களில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் பெறப்படாததால் ஜனவரி 1-ம் தேதி முதல் முதல் தகவல் அறிக்கையை கணினி மூலம் வழங்க திட்டமிட்டிருந்த காவல் துறை தற்போது நீதிமன்றத்தின் ஒப்புதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இதுகுறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷி நிர்மல்குமாரிடம் கேட்டபோது, “அரசு அறிவிப்புக்குப் பிறகு இதனை நடைமுறைப்படுத்துவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT