Published : 03 Feb 2014 12:00 AM
Last Updated : 03 Feb 2014 12:00 AM
உளுந்தூர்பேட்டையில் ஞாயிற்றுக் கிழமை மாலை தேமுதிக ஊழல் எதிர்ப்பு மாநில மாநாட்டை, கட்சியின் தலைவர் விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துத் தொடங்கிவைத்தார்.
மாநாட்டையொட்டி, உளுந்தூர் பேட்டை அருகே உள்ள எறஞ்சி கிராமத்தில் 250 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட மேடை மற்றும் மாநாட்டு பந்தல் அமைத்துள்ளனர். மேடையின் கீழ் பகுதி சென்னை கோட்டை போலவும் மேல் பகுதி பாராளுமன்ற கட்டிடம் போலவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. நுழைவுவாயில் செஞ்சிக் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுப் பந்தல் முழுவதும் கொடி தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. பந்தலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான பேனர்களும் அலங்கார வளைவு களும் அமைக்கப் பட்டுள்ளன. மாநாட்டுக்குள் நுழைய பெரியார், அண்ணா, காமராஜர், கேப்டன் என நான்கு நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மாநாடு நடைபெறும் இடம் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையில் இருந்து மாநாட்டுப் பந்தலுக்கு செல்லும் வழியில் யானைகளும், குதிரைகளும் அணிவகுத்து வரவேற்பதுபோல அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுப் பந்தல் பகுதி முழுவதும் தேமுதிக சின்னமான 7,200 முரசுகள் வைக் கப்பட்டுள்ளன.
மாநாட்டு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கியது. முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு உளுந்தூர் பேட்டை டோல்கேட்டில் கேரள செண்டை மேளதாளத்துடன் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமை
யில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து மாநாட்டுப் பந்தலுக்கு வந்த விஜய்காந்த், கட்சிக்கொடியை ஏற்றி வைத்து மூன்று புறாக்களைப் பறக்கவிட்டார்.
அதைத் தொடர்ந்து ‘முரசு கொட்டும் அரசு’ என்ற தலைப்பில் டாக்டர் அறிவொளி சொற்பொழிவாற்றினார். பின்னர் சாரங்கபாணி தலைமையில் வழக்காடுமன்றம் நிகழ்ச்சி நடந்தது. திரைப்பட பின்னணிப் பாடகர் வேல்முருகன் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்துகொள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்திருந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT