Published : 04 Jan 2014 07:54 PM
Last Updated : 04 Jan 2014 07:54 PM
கோயில் யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்று வந்த ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளை, 28 ஆண்டுகளாகப் பராமரித்து வந்த அதன் பாகன் ஸ்ரீதரன், திடீரென்று பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஆண்டாளுக்கு உணவு கொடுக்க நெருங்க முடியாமல் பிற பாகன்கள் தவிக்கின்றனர்.
துணைப் பாகன்
ஆண்டாளுக்கு துணைப் பாகன் நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தரன் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டதாகவும், துணைப் பாகனுக்கு ஆண்டாள் கட்டுப்பட மறுப்பதாகவும், இந்த சூழ்நிலையில் நலவாழ்வு முகாமில் அதனை பங்கேற்க வைப்பது சிரமம் என்றும் கூறப்பட்டது. முகாம் நடக்கும் 48 நாட்களாவது ஆண்டாளுடன் இருந்துவிட்டு பணியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட தால், ஸ்ரீதரன் பணிக்கு வந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆண்டாள் யானையை தன் குழந்தைபோல் வளர்த்து வந்தார் ஸ்ரீதரன். அவருக்கு வயது 57 ஆகிறது. இந்த யானைக்காக திருமணமே செய்யாமல், இதனுடனேயே 24 மணி நேரமும் இருந்தவர். ஆண்டாள் யானையும் இவர் பேச்சை தவிர வேறு யார் சொல்லையும் கேட்காமலே வளர்ந்துவிட்டது. ஸ்ரீதரனின் பேச்சுக்கு மட்டுமே குழந்தை போல் கட்டுப்படும்.
துவண்டுபோன ஆண்டாள்
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென பாகன் ஸ்ரீதரன், முகாமிலிருந்த ஆண்டாளை பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். இதனால் முகாமுக்கு வந்த நாளிலிருந்து தினம் 2 வேளை உற்சாகக் குளியல், நடைப்பயிற்சி, சத்தான, பசுமையான உணவுகள், உரிய சிகிச்சை பெற்றுவந்த 35 வயது ஆண்டாள், பாகனின் உத்தரவுக் குரல் கேட்காமல், அவரை காண முடியாமல் முகாமின் ஒரு மூலையில் சோகமாக துவண்டு நிற்கிறது.
கண்ணீரோடு பிரியாவிடை
ஆனால், அறநிலையத்துறை ராஜேஷ் என்னும் புதிய பாகனை ஆண்டாள் யானைக்கு நியமித்து உத்தரவிட்டது. இதனையடுத்து ஸ்ரீதரன் கடந்த ஆண்டே தனது ராஜினாமா கடிதத்தை துறை அதிகாரிக்கு அனுப்பினார். ஆனால், அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபட வலியுறுத்தினர்.
அந்த அடிப்படையிலேயே ஆண்டாளுடன் முகாமிற்கு வந்திருந்தார் பாகன் ஸ்ரீதரன். அதன்பிறகு கடந்த 1-ம் தேதி ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. எனவே முகாமை விட்டும், யானையை விட்டும் வெளியேறலாம் என்று அதிகாரிகள் கூறிவிட்டதால், கண்ணீரோடு ஆண்டாளிடமிருந்து பிரியாவிடை பெற்று வெளியேறி சொந்த ஊருக்குப் புறப்பட்டு சென்றார்.
அவர் பிரிந்துபோவதை பார்த்தவாறு இருந்த ஆண்டாள், அது முதலே மற்றவர்களை தன் அருகே நெருங்க விடவில்லை. மற்ற யானைகளைப் போல ஆண்டாளை துணைப் பாகனால் அழைத்துச் செல்ல முடியவில்லை. கால்களில் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர். ஸ்ரீதரனின் திடீர் வெளியேற்றத்தால் தாங்களும் கவலையடைந்துள்ளதாக பாகன்கள் தெரிவித்தனர்.
புதிய துணைப் பாகன் ராஜேஷ், ஸ்ரீதரனின் உறவினர் என்றாலும் அவரால் ஆண்டாளை தன் வழிக்குக் கொண்டு வரமுடியவில்லை. எனவே ஆண்டாளை கட்டுப்படுத்த கேரளத்திலிருந்து புதிய பயிற்சியாளர்கள் வரவுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வெளிப்படையாகப் பேச மறுத்ததோடு, ''அரசு நியமித்த துணைப் பாகனோடு ஸ்ரீதரன் ஒத்துழைக்க மறுத்ததாகவும், ஆண்டாள் யானையிடம் சமிக்ஞை காட்டி துணைப் பாகனை பழக்கவில்லை என்பதாலும், அவரின் ராஜினாமாவை ஏற்று வெளியேற்றவேண்டியதாயிற்று’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT