Last Updated : 28 Dec, 2013 12:00 AM

 

Published : 28 Dec 2013 12:00 AM
Last Updated : 28 Dec 2013 12:00 AM

நோட்டா பட்டனால் பிரச்சினை: தேர்தல் ஆணைய கூட்டத்தில் திமுக எதிர்ப்பு

‘நோட்டா’ பட்டனால் பல இடங்களில் பிரச்சினை ஏற்படும் என்றும், அதை அறி முகப்படுத்துவதற்கு முன்பாக, அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் திமுக தெரிவித்துள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் அவர்கள் கூறியதாவது:

டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக)

ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும். பணம் பெற்றுக் கொண்டு செய்தி வெளியிடு வதைத் தடுக்க, பத்திரிகைகளுக்கு தனியாக தேர்தல் நடத்தை விதிகள் வகுக்க வேண்டும். ஆளுங்கட்சியின் தேர்தல் சின்னம், நலத்திட்ட உதவிகளில் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டும். அப்படி இடம் பெற்றால், ஆளுங்கட்சியின் சின்னத்தை நீக்கிவிட்டு புதிய சின்னத்தைத் தரவேண்டும்.

வி.சி.சந்திரகுமார் (தேமுதிக)

ஒரே நாளில் தேர்தலை நடத்த வேண்டும். வாக்காளர்களுக்கு வேட்பாளர் பணம் கொடுத்திருக்கிறார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடை விதிக்க வேண்டும். எங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்துக்கு பிரச் சாரத் தின்போது மத்திய போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். வேட்பாளரின் செலவை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும்.

எஸ். ஆதவன் (பா.ஜ.க.)

அனைத்துத் தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும். பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் கட்சிக்காரர்கள் நடமாடு வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வழக்கறிஞர் ரஜினிகாந்த் (பகுஜன் சமாஜ்)

தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடும், சாதி மோதல்களைத் தூண்டும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் கருத்து தெரிவித்தா தாக அவர்கள் கூறினர். கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருத்து எதுவும் கூறவில்லை.

திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘வாக்குப்பதிவு இயந்திரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நோட்டா’ பட்டன், பல இடங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும். ஆதிதிராவிட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் உள்ள மற்ற வகுப்பினர் அனைவரும் சேர்ந்து ‘நோட்டா’வுக்கு ஓட்டு போடும் அபாயம்கூட உள்ளது. இதைப் பற்றி அரசியல் கட்சிகளிடம் முன்கூட்டியே கருத்து கேட்டிருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தினோம். இதுபோல் சமூக வலைதளங்களை அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம்’’ என்றார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறும்போது, ‘‘வாக்குப்பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று பெரும் பாலான கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தவும் கோரினர்.

இதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். தேர்தல் நேரத்தில் சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x