Last Updated : 16 Mar, 2017 09:00 AM

 

Published : 16 Mar 2017 09:00 AM
Last Updated : 16 Mar 2017 09:00 AM

பணத்தாசையை தூண்டும் செம்மரம்: அறியாமைக்கு இரையாகும் மலைவாழ் இளைஞர்கள்

ஆந்திர செம்மரக் கடத்தலும், அது தொடர்பாக தமிழர்கள் கைது செய்யப்படுவதும் அன்றாடச் செய்திகளில் ஒன்றாக இடம் பிடித்துக்கொண்டு இருக்கிறது.

செம்மரம் கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து சொகுசாக வாழ்பவர் கள் அரசியல் பின்புலத்தில் வளமாக இருக்கிறார்கள். மரம் வெட்டுவதில் கைதேர்ந்த மலை வாழ் இளைஞர்களைத் தேடித் தரும் முகவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்து பாதுகாப்பாக இருக்கிறார்கள். இவர்களுக்கு மரம் வெட்டி தரும் மலைவாழ் கூலிகளே இந்த கைது, துப்பாக்கிச் சூடு போன்றவற்றில் சிக்குகிறார்கள்.

ஆந்திர அதிரடிப்படை போலீ ஸார் கடந்த வாரம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் வனப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு வெட்டிய செம்மரங்களைக் கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றதாக 159 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 280 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

செம்மரம் கடத்த முயன்றவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூர், விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை மற்றும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக திருப்பதி அதிரடிப்படை போலீஸார் தெரிவித்தனர். செம்மரம் வெட்டச் சென்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் நிலை குறித்து அறிய கல்வராயன்மலைப் பகுதிக்குச் சென்றோம்.

குண்டியநத்தம் சடையன் மகன் ரமேஷ், தனது தந்தை ஆந்திர போலீஸாரால் கைது செய்திருப்பதை உறுதி செய்தார். தனது தந்தை சென்றது தனக்கு தெரியாது எனவும், தான் ஆந்திரப் பகுதியில் லாரி ஓட்டி வருவதால் அவர் பற்றி ஏதேனும் பேசினால் தனக்குப் பிரச்சினை எழ வாய்ப்பு உள்ளதால் மேற்கொண்டு எதுவும் கூற இயலாது என்றும் தெரிவித்துவிட்டார்.

கடந்த ஆண்டு செம்மரம் கடத்த முயன்றதாக ஆந்திர போலீஸாரால் கைதாகி சிறையிலேயே இறந்த தருமன் என்பவரது மனைவி மலர்(35) தனது 4 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகனுடன் மிகவும் வறுமையான சூழலில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கிறார். கணவர் இறந்த நிலையில் கைக்குழந்தைகளுடன் கூலி வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

மூத்த மகளுக்கு தற்போதுதான் 10 வயதாகிறது. அவரும் சில நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார். மற்ற நாட்களில் தாயுடன் கூலி வேலைக்குச் செல்கிறார். செம்மரம் வெட்டச் சென்று இப்படி பல குடும்பங்கள் குடும்பத் தலைவரை இழந்து பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருவது கல்வராயன்மலையில் தொடர்கதையாகி வருகிறது.

நடுதொரடிபட்டு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் கூறும்போது, “மலைகளில் விளைகிற பயிருக்கு உரிய விலை கிடைத்தாலே, இங்கு உள்ளவர்கள் அண்டை மாநிலங்களுக்கு மரம் வெட்டச் செல்ல வாய்ப்பில்லை. மேலும், மலைவாழ் மக்களுக் கான அரசின் பிரத்யேக திட்டங்

கள் பயனாளிகளுக்கு சென்றடை வதற்குள், அரசு அலுவலகங்களில் உள்ள இடைத்தரகர்கள் கமிஷன் கேட்டு பயனைச் சென்றடையாமல் தடுத்துவிடுகின்றனர்” என்றார்.

மலைவாழ் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் கூறும்போது, “செம்மரக் கடத்தல்காரர்களுக்கு, கைப்பாவையாக விளங்கும் உள்ளூர் முகவர்களால்தான் பாதி குடும்பங்கள் சீரழிகின்றன. செம்மரக்கட்டையை கடத்த 1 கிலோவுக்கு ரூ.1,500 வரை கூலி பேசப்பட்டு அழைத்துச் செல்கின்றனர். மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் 25 கிலோ வரை சுமந்து, சுமார் 30 கி.மீட்டர் வரை நடந்து செல்லும் அளவுக்கு திறன்கொண்டவர்கள்.

அதனால்தான் கடத்தல்காரர்கள் மலைவாழ் மக்களைப் பயன்படுத்து கின்றனர். இவர்களும் நிறைய வருமானம் கிடைக்கிறதே என்ற ஆர்வத்தில், அன்றாடம் செய்யும் தொழிலையும் விட்டு, அங்கே சென்று சிக்கிக்கொள்கின்றனர். இங்கு விளையும் விளைபொருட் களுக்கு உரிய விலையை நிர்ண யித்து, கொள்முதல் செய்தால், பெரும்பாலானோர் இதுபோன்ற முறைகேடான செயலுக்கு செல்வது தவிர்க்கப்படும். மலைவாழ் மக்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொள்வதும், வேலை வாய்ப்பு களுக்கு அரசு வழிவகைகள் செய்யாததும், கல்வி அறிவு இல்லாததுமே இதுபோன்ற சம்பவங் களுக்குக் காரணம்” என்றார்.

இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் கூறும்போது, “கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் முறைகேடான வகையில் செயல்பட்டு, ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்படுவதாக கூறப்படும் நபர்களின் குடும்பத்தினர் எவரும் இதுவரை மாவட்ட நிர்வாகத்தை அணுகவில்லை. அவ்வாறு அணுகினால், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.செம்மரம் கடத்த முயன்றதாக கைதாகி இறந்த தருமனின் மனைவி மலர் மற்றும் குழந்தைகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x