Published : 01 Nov 2014 08:19 AM
Last Updated : 01 Nov 2014 08:19 AM

ஞானதேசிகனின் குற்றச்சாட்டுக்கு கட்சியில் எதிர்ப்பு: வாசன் அணியினர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுவதாக பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலகலுக்கு, தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் வரவேற்பும், அவரது குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன் தரப்பினர், கட்சி மேலிடம் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் கூறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி யில் இருந்து நேற்று முன்தினம் ராஜினாமா செய்த ஞானதேசிகன், கூட்டணி விவகாரம் மற்றும் பல் வேறு பிரச்சினைகளில் காங்கிரஸ் மேலிடம், தமிழக தலைமையிடம் கலந்து ஆலோசிப்பதில்லை என்று நேற்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸின் புதிய உறுப்பினர் அட்டையில், காமராஜர், மூப்பனார் படங்கள் இருக்கக் கூடாது என்று, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக வாசன் ஆதரவாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து, ஞானதேசிகனும், வாசனும் தனித்தனியே அளித்த பேட்டியில், காங்கிரஸுக்கு உழைத்த மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் கட்சியை எப்படி வளர்ப்பது என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், ஞானதேசிகன் மற்றும் வாசன் தரப்பினர் வேண்டுமென்று, குற்றம்சாட்டுவதாக கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:

எம். கிருஷ்ணசாமி, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்:

அகில இந்திய காங்கிரஸ் அப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும், மேலிடத்தின் முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கட்டுப்படுவோம். உறுப்பினர் அட்டையில் படம் வேண்டாமென்பதால், அது காமராஜருக்கோ அல்லது வேறு தலைவர்களுக்கோ அவமரியாதை என்று அர்த்தமல்ல.

உறுப்பினர் அட்டையில் உள்ளூர் தலைவர்கள் இருக்க வேண்டும் என்றால், பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்

ஞானதேசிகன் சொல்வது போல், இவ்வளவு பிரச்சினைகள் இருந்தால், அவர் ஏன் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கவில்லை? நான் மேலிடப் பொறுப்பாளரிடம் பேசினேன். அவர் உறுப்பினர் அட்டையில் படம் இருப்பது குறித்து, காங்கிரஸ் மேலிடம் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை என்றார்.

கோபண்ணா, மூத்த காங்கிரஸ் தலைவர்:

தலைமை மாற்றத்தை வரவேற்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சி செயலிழந்து விட்டது. தமிழக காங்கிரஸ் மோசமான நிலையை நோக்கி செல்கிறது. புதிய தலைமை வர வேண்டும். உறுப்பினர் அட்டையில் காமராஜர் படம் வேண்டாமென்று, மேலிடம் கூறியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

கார்த்தி ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்:

ஞானதேசிகனின் ராஜினாமா தமிழக காங்கிரஸுக்கு புதிய தொடக்கமாகும். உறுப்பினர் அட்டையைப் பொறுத்தவரை, தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு ஒரே மாதிரியான வடிவம், மாதிரி அட்டை வழங்கப்பட வேண்டும். மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடக் கூடாது. என்னைப் பொறுத்தவரை, தலைவர்களின் படத்தை விட கட்சி கொடியிலுள்ள ராட்டை மற்றும் கை சின்னமே அட்டையில் போதும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இன்னும் சில மூத்த தலைவர்கள், தங்கள் பெயர்கள் வெளியிட விரும்பாமல் கூறுகையில், ‘‘ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கூறுவது போல், மூப்பனார் படம் வேண்டுமென்றால், இன்னொரு தரப்பினர் அவர்களுக்குரிய தலை வர்களின் படம் கேட்கின்றனர். காங்கி ரஸின் பொதுவான உறுப்பினர் அட்டையிலேயே பல கோஷ்டிகளை அடையாளப்படுத்தும் மோசமான நிலையே ஏற்படும்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x