Published : 20 Jun 2015 08:57 AM
Last Updated : 20 Jun 2015 08:57 AM

நகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மூத்த குடிமக்கள் அனைவரும், பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் மாநில ஆட்சிக்குழுக் கூட்டம், அவிநாசி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

மாநிலப் பொருளாளர் மா.சுந்தரம், துணைத் தலைவர் ராமு.சிதம்பரம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்: காசில்லா மருத்துவம் என்பதை ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதிய மருத்துவக் காப்பீட்டில் உறுதி செய்ய வேண்டும். மாத மருத்துவப்படியை ரூ.500 ஆக உயர்த்த வேண்டும். 20 ஆண்டு பணிக்கு முழு ஓய்வூதியம் அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500 ஆக திருத்த வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தேர்தல் வாக்குறுதிப்படி வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தை நீடிக்கச் செய்ய வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஜெயலலிதா சொன்னது போல, 58 வயது மூத்த குடிமக்கள் மாநகர, நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். புறநகர்ப் பேருந்துகளில் 50 சதவீத கட்டணச் சலுகை தர வேண்டும்.

குடும்பங்களை சீரழிக்கும் மதுவை அறவே ஒழித்திட வேண்டும். மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு, ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பரிந்துரை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் அ. ராஜண்ணன் இயக்க மற்றும் இதழ் அறிக்கை வாசித்தார். தலைமை நிலையச் செயலாளர் ச.ராமசாமி நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x