Last Updated : 19 Jan, 2014 12:01 PM

 

Published : 19 Jan 2014 12:01 PM
Last Updated : 19 Jan 2014 12:01 PM

அரசுப் பள்ளிகளில் ரூ.161 கோடியில் வகுப்பறை, ஆய்வுக்கூடம்: கட்டுமானப் பணிகள் பொதுப்பணித் துறையிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் ரூ.161 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் 2010-11ம் கல்வி ஆண்டில் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,851 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 698 அறிவியல் ஆய்வகங்கள் கட்ட ரூ.146.78 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது இப்பணிகள் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக, கூடுதல் நிதியாக ரூ.71.18 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

ஒரு வகுப்பறையின் மதிப்பீடு ரூ.8.53 லட்சம், ஆய்வக மதிப்பீடு ரூ.9.03 லட்சம். இத்திட்டத்தின்கீழ், 32 மாவட்டங்களில் 1,339 வகுப்பறைகள், 528 அறிவியல் ஆய்வகங்கள் அமைக்க முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டிடப் பணிகளை மேற் கொள்ள மாவட்டங்களில் உள்ள நிதியை பொதுப்பணித் துறைக்கு காசோலை மூலம் வழங்க வேண்டும். மத்திய அரசால் அறிவுறுத்தியுள்ள பள்ளிகளில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய பள்ளிகளின் பட்டியலையும் பொதுப்பணித் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதில் இருப்பு வைக்கப்படும் தொகைகள், கூடுதல் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும். அனைத்து மாவட்ட திட்ட இயக்குநர்களின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் ஒத்துழைப்புடன் இப்பணிகள் நடைபெற்றுவந்தன. ஆனால், அதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் நிலவுவதால், பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் மூலம், குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட தொகையில் முறையாகப் பணிகள் நிறைவடைய இதுவே சிறந்தது’ என அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x