Published : 12 Apr 2017 07:00 PM
Last Updated : 12 Apr 2017 07:00 PM
பாலக்காட்டில் உள்ள மலம்புழா அணைக்கு கோடை தொடங்கியும் சுற்றுலா பயணிகளின் வரத்து மிகக் குறைவாகவே உள்ளது. அணையில் தண்ணீர் குறைவு மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகள் காரணமாகவே கூட்டம் குறைவாக உள்ளது. இந்த நிலைமை இன்னும் ஓரிரு வாரத்தில் சரியாகும் என தெரிவிக்கின்றனர் சுற்றுலாத் துறை அலுவலர்கள்.
மலம்புழா அணை தென்னிந்தியாவில் கேரள மாநிலம் பாலக்காடு அருகே அமைந்துள்ள பெரும் நீர்த்தேக்கம். கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் சாலையில் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் கஞ்சிக்கோடு அருகே பிரியும் சாலையில் 7 கிலோமீட்டர் சென்றால் எட்டுவது இந்த அணை. இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்னணியில் அமைந்துள்ள இந்த அணை சுமார் 1.8 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இரு கால்வாய்களுடன், 42,090 ஹெக்டேர் பரப்பளவுள்ள நீர்த்தேக்கத்தையும் கொண்டுள்ளது.
1955ல் கட்டிமுடிக்கப்பட்ட இந்த அணையின் கால்வாய்கள் மூலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெருவாரியான வேளாண் நிலங்கள் பயன் பெறுவதோடு, இம்மாவட்டத்தின் குடிநீர்த்தேவையையும் இந்த அணையே பூர்த்தி செய்கிறது. அத்துடன் இந்த அணை சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது.
28.5 ஏக்கர் பரப்பளவில் மலம்புழாத் தோட்டம் என்னும் கண்கவர் தோட்டத்தையும், குழந்தைகளை கவரும் குழந்தைகள் பூங்கா, அதை சுற்றி வரும் குட்டிரயிலையும் கொண்டுள்ளது. இந்த அணைக்கு அருகில் பல பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன. அணைக்கு மிக அருகில் மீன் வளர்ப்புத் தொட்டியும் (Aquarium), பாம்புப் பூங்காவையும் கொண்டுள்ளது. இங்கு மலைப்பாம்பு , நாகப்பாம்பு, விரியன் பாம்பு உட்படப் பலவகைப் பாம்புகள் உள்ளன.மேலும் இதிலிருந்து அரை கி.மீ. தொலைவில் ஜப்பானீஸ் பூங்கா, பாறைகள் பூங்காவையும் (Rock Garden) அருகில் கொண்டுள்ளது.
எப்போதும் போதுமான நீர் இருப்பை கொண்டுள்ள மலம்புழா அணையின் சுற்றுப்பகுதிகள் கடந்த 4 ஆண்டுகளாக கோடையில் தவறாமல் வறட்சியை சந்தித்து வருகின்றன. அதிலும் கடந்த ஆண்டு இது வரலாறு காணாத வறட்சியை சந்தித்தது. ஜூன் மாதத்தில் பெய்யும் மழைதான் மலம்புழாவை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் போன பருவமழையும் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. எனவே இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதமே மலம்புழா பகுதிகளில் வறட்சி நிலவ ஆரம்பித்து விட்டது. அதைத்தொடர்ந்து விவசாயத்திற்கான தண்ணீரை நிறுத்தி விட்டு குடிநீர்த் தேவைக்கான நீர் மட்டுமே அணை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் தற்போது அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் மிகக்குறைந்துள்ளது. பொதுவாக மார்ச் மாதம் தொடங்கினாலே இங்கே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வரத்தொடங்குவர். குறிப்பாக தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து மக்கள் மிகுதியாக வருவர். அது தற்போது 4 ல் ஒரு பங்காக சுருங்கி விட்டதாக தெரிவிக்கின்றனர் மலம்புழா அணைப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள்.
அதனால் இங்குள்ள தொங்கு பாலத்தில் நடப்பவர்களை அரிதாகவே காணமுடிகிறது. படகு ஓட்டமும் ஓரிருவருடன் சுரத்தில்லாமல் நடக்கிறது. அணைப்பகுதிக்கு மேலே நகரும் ரோப்கார் (விஞ்ச்) பெட்டிகளும் காலியாகவே நகர்த்தப்படுகின்றன. பாம்புப் பண்ணை, மீன் பண்ணை என வரும் கண்காட்சி மையங்களில் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே தென்படுகின்றனர். குழந்தைகள் இல்லாமல் குட்டி ரயில் நின்றது நின்றபடி இருக்கிறது.
இதுகுறித்து அணையில் பணியாற்றும் சுற்றுலாத்துறை ஊழியர்கள் கூறும்போது, 'இந்த சீஸனில் இவ்வளவு குறைவாக சுற்றுலா பயணிகள் வருவது இப்போதுதான் நடக்கிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் எப்போதும் போல் கூட்டம் இருக்கிறது. பொதுவாக வெயில் தொடங்கி விட்டாலே கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.
இந்த முறை ஏனோ அப்படி வருபவர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. தற்போது பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடக்கிறது. அது முடிந்ததும் வழக்கம்போல கண்டிப்பாக கூட்டம் வரும்!’ என நம்பிக்கை தெரிவித்தனர்.
சீஸனுக்கு கூட்டம் வரும் என்ற நம்பிக்கைக்கு ஏற்ப தற்போது மலம்புழா அணையில் உள்ள பூங்காக்களிலும், செயற்கை நீருற்றுகளையும் அழகுபடுத்தும் பராமரிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர் அலுவலர்கள்.
ஜடாயு பாறையில் கேபின் தொழில்நுட்பத்தில் புதிய ரோப்கார்
மலம்புழா சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்ப்பது அணைப்பகுதியின் உச்சியில் நீளவாக்கில் சென்று வரும் ரோப்கார். இதில் 64 பெட்டிகள் உள்ளன. ஒரு பெட்டியில் இருவர் ஏற மட்டுமே அனுமதி. இதற்காக அனைத்து வரிகளும் உட்பட நபருக்கு ரூ.70 கட்டணமாக வசூலிக்கிறார்கள். 110 செ.மீ உயரத்திற்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு கட்டணமில்லை.
ஆண்டுக்கு கிட்டத்தட்ட 'ஜாலி ரய்டு' என்ற பெயரில் இதில் 3 லட்சம் பேர் பயணம் செய்வதாக கணக்கு சொல்கிறார்கள் இந்த ரோப்காரை இயக்கும் பணியாளர்கள். அவர்கள் கூறுகையில், ''ஏப்ரல், மே மாதங்களில் மட்டும்தான் இங்கே கூட்டம் குவியும். 3ல் ஒரு பங்கு சுற்றுலா பயணிகள் இந்த 2 மாதங்களில் மட்டுமே வந்துபோகிறார்கள். இந்த ரோப்கார் சிஸ்டத்தை பிரிட்டீஸ் ரோப் இன்ஜினியரிங் கம்பெனி கேரளா சுற்றுலா துறையிடம் லீஸ் எடுத்து நடத்தி வருகிறது. இந்த முறையில் இயங்கும் ரோப்கார் சிஸ்டம் தென்னிந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் உள்ளது. (பழநியில் உள்ளது இது போன்றதல்லவாம்)
1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ரோப் கார் சிஸ்டத்தில் இதுவரை சின்ன விபத்து கூட ஏற்பட்டதில்லை. அந்த அளவுக்கு இது தினசரி பராமரிக்கப்படுகிறது. காலை 9 மணியிலிருந்து 10 மணி வரை இயந்திரங்கள், ஒவ்வொரு பெட்டிகள் கணினி தொழில்நுட்பத்தில் பரிசோதிக்கப்பட்டு, ஆயிலிங் சர்வீஸ் செய்யப்படுகிறது. 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இயக்கம். ஒரு சுற்றுக்கு 20 அனுமதி. மதியம் 1 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை. மாலை 5.30மணிக்கே டிக்கெட் கொடுப்பது நிறுத்தப்பட்டுவிடும். சீஸன் காலங்களில் இரவு 8 மணி வரை இயங்கும்!'' என தெரிவித்தனர்.
இப்போது இயங்கும் இந்த ரோப்-காரை பொறுத்தவரை பழைய தொழில்நுட்பத்திலேயே இயங்குகிறதாம். தற்போது புதிதாக கேரள மாநிலம் கொல்லத்தில் ஜடாயுபாறை பகுதியில் இதே நிறுவனம் கேபின் சிஸ்டத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரோப்கார் உருவாக்கி வருகிறதாம். அது இதை விட பாதுகாப்பானது என தெரிவிக்கிறார்கள் இங்குள்ள பொறியாளர்கள்.
எகிப்து பிரமிடு குகைவெளிபோல் பாறைகள் பூங்கா!
கஞ்சிக் கோட்டிலிருந்து மலம்புழா அணை செல்லும் போது அணைக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாறைகள் பூங்கா (Rock garden). நபருக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கிறார்கள். கேமராவுக்கு ரூ. 20 கட்டணம். இதற்குள் நுழைந்தால் ஏதோ எகிப்து பிரமிடுகளுக்குள் நுழைந்து வருவது போல் பிரமிப்பு.
உள்ளே கேரளா மாநிலத்தின் பண்பாடு, கலாச்சார, திருவிழாக்களை மையமாக கொண்ட ஏராளமான பாறைச் சிற்பங்கள், சிறு, சிறு கற்கள், மொசைக் டைல்ஸ் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஓவியங்கள் எல்லாம் காணமுடிகிறது. பெரிய அகழி. அதை ஒட்டி கற்சிற்பங்களாய் நிற்கும் பறவைகள். குகைக்குள் வசிக்கும் ஆதி மனிதன், அவனின் மனைவி, குழந்தை என கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரம் குகை வெளிக்குள் பயணித்து ஆயிரக்கணக்கான பாறை சிற்பங்களை, ஓவியங்களை தரிசிக்கிறோம். பல இடங்களில் மின்சாரக் கம்பங்களில் பயன்படுத்தப்படும் பீங்கான் கற்களால் ஆன பியூஸ் கட்டைகளே லட்சக்கணக்கில் சுவராக பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தரிசனத்தை தரிசிப்பதற்கு ஒரு காலத்தில் சுற்றுலாவாசிகள் நிறைய பேர் வந்து சென்றனராம். இப்போது அப்படி வருவது குறைந்திருக்கிறது. இந்த பாறைகள் பூங்காவும் சீஸனுக்காகவே காத்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT