Last Updated : 10 Sep, 2016 10:32 AM

 

Published : 10 Sep 2016 10:32 AM
Last Updated : 10 Sep 2016 10:32 AM

சமூகப் போராளிகளை நினைவுகூரும் வகையில் கார்ல்மார்க்ஸ் முதல் வெண்மணி வரை குழந்தைகளுக்கு கம்யூனிஸ பெயர்கள்: கொள்கைப் பிடிப்புடன் திகழும் வன்னிவேலம்பட்டி கிராமம்

மதுரை மாவட்டத்தில் உள்ள வன்னிவேலம்பட்டி கிராமத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக கம்யூனிஸ கொள்கைப் பிடிப்புடன் உள்ளனர். அதன் வெளிப்பாடாக தங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்யூனிஸ இயக்கப் போராளிகளின் பெயர்களைச் சூட்டி அழகு பார்க் கின்றனர்.

மதுரை மாவட்டம் டி.கல்லுப் பட்டி அருகே உள்ளது வன்னி வேலம்பட்டி கிராமம். முற்றிலும் விவசாயம், கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பியுள்ள இக்கிராமத் தில் வெள்ளரி, பருத்தி, பயறு வகை கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

கிராமங்களில் குலதெய்வம், முன்னோர்கள், சினிமா நடிகர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தை களுக்குச் சூட்டி வருபவர்களே அதிகம். ஆனால், இக்கிராமத்தில் கம்யூனிஸ தாக்கத்தால், கார்ல் மார்க்ஸ், சேகுவேரா உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் முதல் ஜோதிபாசு, நிருபன் சக்கரவர்த்தி போன்ற இந்திய தலைவர்கள், ராமமூர்த்தி, உமாநாத் போன்ற தமிழக தலைவர்கள் வரை கம்யூ னிஸ போராளிகளின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டு கின்றனர்.

அது மட்டுமின்றி, கியூபா போன்ற கம்யூனிஸ நாடுகளின் பெயர்களையும், கீழ்வெண்மணி போராட்டத்தை நினைவுகூறும் வகையில் வெண்மணி என்ற ஊர் பெயரையும் குழந்தைகளுக்குச் சூட்டியுள்ளனர்.

கம்யூனிஸ பாரம்பரியம்

இக்கிராமத்தில் உள்ள ஒவ் வொரு குடும்பத்திலும் கம்யூனிஸ பாரம்பரியம் உள்ளது. கிராம இளைஞர்களும், சிறுவர்களும் சர்வதேச தலைவர்களின் பெயர் களைக் கூறி தங்களுக்குள் மாமன், மைத்துனன் உறவுமுறை சொல்லிக்கொள்கின்றனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் 35 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருந்ததைப் போலவே இந்த கிராமமும் தொடர்ந்து 35 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட்களின் கோட்டையாகவே கருதப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றபோது தமிழ்நாட் டின் மேற்குவங்கம் என சுவரொட்டி கள் ஒட்டும் அளவுக்கு இம்மக்களி டையே கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது.

வன்னிவேலம்பட்டி கிராமத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்.

தலைவர்கள் வாழ்க்கை வரலாறு

இதுகுறித்து இக்கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சிதான் எங்கள் கிராமத்தில் செல்வாக்குடன் திகழ்ந்தது.

பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் கம்யூனிஸ கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினர். அதன் தொடர்ச்சியாக படித்தவர்கள் முதல் கூலி விவசாயிகள் வரை கம்யூனிஸ்ட் கொள்கையைப் பின் பற்றத் தொடங்கினோம்.

மக்களிடம் வாசிப்புப் பழக்கம் அதிகரித்தது. உலக வரலாற்றை யும், தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படிக்கத் தொடங்கி னோம்.

இதன் தொடர்ச்சியாக சமையன், வேம்புலு உள்ளிட்ட சாமிகளின் பெயர்களைச் சூட்டிய நாங்கள், குழந்தைகளுக்கும், பேரன், பேத்திகளுக்கும் கம்யூனிஸ புரட்சியாளர்களின் பெயர்களைச் சூட்ட ஆரம்பித்தோம். இன்று வரை அது தொடர்கிறது.

வீதி நாடகங்கள்

இங்கே சூட்டப்படும் பெயர் கள் வெளியூர்வாசிகளுக்கு வித்தி யாசமாக தெரியும். ஆனால் எங்களுக்கோ போராளிகள்தான் நினைவுக்கு வருவார்கள். தலை வர்களின் நூற்றாண்டு விழாக் களைக் கொண்டாடுவதுடன், பொதுக்கூட்டங்கள், முற்போக்குக் கருத்துகளை எடுத்துக் கூறும் வகையில் கலைக்குழுக்களின் மூலம் வீதி நாடகங்களையும் நடத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x