Published : 28 Jan 2017 11:19 AM
Last Updated : 28 Jan 2017 11:19 AM

குடிமைப் பணிக்கான தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் கோவை மைய நூலகம்

நூலகங்கள் என்பது வாசிப்பதற்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி, ஐஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-1 தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கிறது கோவை மாவட்ட மைய நூலகம்.

மாவட்ட மைய நூலகம், கிளை நூலகம், பகுதி நேர நூலகம், மகளிர்-குழந்தைகள் நூலகம், ஊர்ப்புற நூலகம், நடமாடும் நூலகம் என 5,000-க்கும் மேற்பட்ட நூலகங்கள் தமிழகம் முழுக்க இயங்கி வருகின்றன.

கோவை மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம், 90 கிளை நூலகங்கள், 100 ஊர்ப்புற நூலகங்கள், 14 குழந்தைகள், பெண்கள் நூலகங்கள், 56 பகுதி நேர நூலகங்கள், 3 சிறப்பு பகுதி நேர நூலகங்கள் (மத்திய சிறை, பொள்ளாச்சி கிளை சிறை மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம்), ஒரு நடமாடும் நூலகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

ஆர்.எஸ்.புரத்தில் இயங்கி வரும் கோவை மாவட்ட மைய நூலகம் கடந்த ஆண்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. இதன் மூலம் இங்கு கண்காணிப்பு கேமரா, கலர் பிரிண்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. இதேகாலகட்டத்தில், இந்த மைய நூலகத்தில் மாற்றுத் திறனாளிகள் பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்பட 75 பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆடியோ புத்தகங்கள் படித்துக் காண்பிப்பது, அவர்களுக்கான ஓவியப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் நடத்துவது, மாற்றுத் திறனாளிகள் தினம், பார்வையற்றோர் தினம் கொண்டாடுவது போன்றவை நிகழ்த்தப்படுகின்றன.

தற்போது குடிமைப்பணி பயிறுவிப்பு மையத்தையும் தொடங்கியுள்ள மாவட்ட நூலகத் துறை. இதன் மூலம்1,000-க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர் நூலகத் துறை அலுவலர்கள். இதுகுறித்து கோவை மாவட்ட நூலகர் ஜெ.கார்த்திகேயன் கூறியதாவது: குடிமைப் பணி பயிற்றுவிப்பு மையம் 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடைபெற்ற மாதிரித் தேர்வில் சுமார் 700 பேர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-1 தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைத்தோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதில் பங்கேற்க நூலகத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் ரூ.60. தற்போது 22 பேர் பயிற்சி பெறுகின்றனர்.

ஆளுமை மேம்பாடு, திறன் வளர்ப்பு, நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்காக ஓய்வுபெற்ற ஐஆர்எஸ் அதிகாரியை நியமித்துள்ளோம்.

அவரது தலைமையில் மைய நூலகம் மூலமாக குழு உருவாக்கப்பட்டு, பாடப் பிரிவு வாரியாக நிபுணர்கள் அழைக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-1 பயிற்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துமாறு மேலிடத்துக்கு தெரிவித்துள்ளோம்.

இதற்கு முன் குடிமைப் பணி பயிற்சிக்கென நூலகத் துறை சார்பில் நாமக்கல்லில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி கோவை மைய நூலகத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

“தற்போது புத்தக வாசிப்பு குறைந்துவருகிறது. குறிப்பாக, குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கம் இல்லை. அவர்கள் செல்போன், டிவி-க்களில் ஆழ்ந்து விடுகிறார்கள்” என்று கூறுகின்றனர். அது மிகவும் தவறு. சர்வதேச அளவில் குழந்தைகள் வாசிப்பு குறித்து கணக்கெடுத்ததில், தமிழகத்தில்தான் அதிக குழந்தைகள் வாசிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

நூலகத்துக்குச் சென்று படிக்க வேண்டும். நூலகத்தில் அரிதினும் அரிதான நூல்கள் குவிந்துள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியம். குழந்தைகளை நூலகத்துக்கு வரவழைக்க பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். வாசிப்பைத் தாண்டி பல்வேறு விஷயங்களை அவர்களுக்குக் கற்றுத்தரவும் முயற்சிக்கிறோம். அதற்காக, இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்தி, வாசிப்பு இயக்கம், பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம் என்றார்.

மாவட்ட நூலக ஆணைக் குழுவின்கீழ் ஒரு நடமாடும் நூலகம் இயங்கி வருகிறது. பல்வேறு பகுதிகளுக்கு அந்த வாகனம் சென்று, மக்களுக்கு புத்தகங்களை வழங்கி, பின்னர் அவற்றைத் திரும்பப் பெறுகிறது. இதன் மூலம் குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதுடன், நூல்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பது குறித்தும் கற்பிக்கப்படுகிறது.

அதேபோல, மகளிர், குழந்தைகளுக்கான 14 தனி நூலகங்களில், பெண்கள், குழந்தைகளுக்கான நூல்கள் வைக்கப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு குறித்தும் வாசகர்களுக்கு விளக்கப்படுவதால், வரவேற்பு அதிகரித்துள்ளதாக நூலகத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x