Last Updated : 04 Dec, 2013 12:00 AM

 

Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM

ஏற்காடு மக்கள் ஏற்கப்போவது யாரை?

அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்று நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடக்கும் தேர்தல் என்பதால் இதன் முடிவு முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வும் வரிந்துகட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் வெற்றிக்காக தீவிரம் காட்டின. இதன்ஒரு பகுதியாக ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி, தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வதில் தொடங்கி, தெருவில் அவ்வப்போது மோதிக் கொள்வது வரை தங்கள் பாணி தேர்தல் பணிகளை செய்து வந்தனர். இதில் கிடைக்கும் வெற்றி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வெற்றிக்கு பெரிய உந்துசக்தியாக அமையும் என்று இருதரப்பினருமே உறுதியாக நம்புகின்றனர்.

பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் கையே சற்று ஓங்கியிருப்பது கடந்த கால தேர்தல் வரலாறு. இங்கு வெற்றி பெற்ற, மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சி.பெருமாள், திமுக வேட்பாளர் சி.தமிழ்செல்வனைவிட 37,582 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றியடைந்தார். ஆனால் 2006 தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளரோ, அதிமுக வேட்பாளரை விட 4,107 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். அதேசமயம், 2001 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர், திமுக வேட்பாளரை விட 33 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

பொதுவாகவே, தமிழகத்தில் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே பெரும்பாலும் வெற்றி பெற்று வந்திருக்கிறது. 2011-க்குப் பிறகு நடந்த 3 இடைத் தேர்தல்களிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிடாத மற்றும் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காத பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 முக்கிய கட்சிகளுக்கு சாதகமான வாக்குகளை கவர்ந்திழுப்பவர்களுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதால், அதை குறிவைத்து இருகட்சிகளியையே கடும் போட்டி நிலவுகிறது. தேமுதிக-வின் வாக்கு வங்கி அதிமுகவுக்கு சாதகமாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் பா.ம.க., காங்கிரஸ் ஆதரவு வாக்குகள், தி.மு.க. பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம்.

இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதா, ஏற்காடு இடைத்தேர்தல் வெற்றி, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னறிவிப்பாகும் என்று கூறியுள்ளார். மின்வெட்டு, அடிப்படை வசதி குறைவு போன்ற பிரச்சினைகளை முன்வைத்து திமுகவும் அம்மா திட்டம் போன்ற பல்வேறு சாதனைகளை பிரதானமாக வைத்து அ.தி.மு.க.வும் பிரசாரம் செய்தன.

வாக்காளர்களின் தீர்ப்பு என்ன என்பது 8-ம் தேதி தெரிந்துவிடும். அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றால், அதிமுக வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கான தெம்பு பெறும் என்பதென்னவோ நிஜம்.

இது குறித்து அரசியல் விமர்சகர் ஞாநி, ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ம.க. போன்ற கட்சியினரின் வாக்குகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையாகக் கிடைக்காது. அந்த ஓட்டுக்கள் சிதறும் வாய்ப்புகள் அதிகம். தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அவர்கள் வாக்களிப்பார்கள். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நோட்டா பொத்தானை அமுக்குங்கள் என்று சொல்லி இருந்தாலாவது அந்த நோட்டாவுக்கு நிறைய பேர் வாக்கு போட்டிருப்பார்கள். தமிழகத்தில் இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்று வந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x