Published : 10 Nov 2014 08:58 AM
Last Updated : 10 Nov 2014 08:58 AM

பிப்ரவரியில் மார்க்சிஸ்ட் மாநில மாநாடு: 25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடக்கிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, பிப்ரவரி மாதம் சென்னையில் நடக்க உள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தலை நகரில் மாநாடு நடக்கவிருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 முதல் 19-ம் தேதி வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாட்டை கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழு நடத்துகிறது. ஒன்றுபட்ட சென்னை மாவட்டக்குழுவாக இருந்தபோது 1978-ல் கட்சியின் 10-வது மாநாடும், 1989-ல் 13-வது மாநாடும் சென்னையில் நடத்தப்பட்டது. 1994-ம் ஆண்டில் கட்சி வடசென்னை மற்றும் தென் சென்னை மாவட்டக் குழுக்களாக பிரிக்கப்பட்ட பிறகு சென்னையில் மாநில மாநாடு நடக்கவே இல்லை.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் மாநில மாநாடு நடக்கவிருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே தீவிரமாக நடந்து வருகின்றன.

இணையத்தில் குவியும் கவனம்

மற்ற கட்சிகளைப்போல மார்க்சிஸ்ட் கட்சியும் தொழில் நுட்பம் மற்றும் வலைதளங்களின் பயன்பாட்டில் கவனத்தை திருப்பியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி,ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘இணைய பயன்பாட்டாளர்கள் குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பது மிக அவசியம் என்று கட்சி கருதுகிறது. எனவே, இந்த முறை தனி இணையதளம் தொடக்கம், சமூக வலைதள பிரச்சாரம் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது. கட்சியின் 50 ஆண்டுகால வரலாற்றை தெரிவிக்கும் பணியும் மாநாட்டு பணிகளோடு சேர்ந்து நடக்கும். வகுப்புவாதம், ஊழல், நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்து சென்னையில் நடக்கும் இந்த மாநாடு அரசியல் திருப்பு முனையாக இருக்கும்’’ என்றார்.

தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் கூறிய தாவது:

கடந்த 2008-க்கு பிறகு தென் சென்னை மாவட்டத்தில் கட்சியில் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு கட்சியின் வரலாறு குறித்து தெரிவிக்க குறுந்தகடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதை சுமார் 300 கிளைகளில் திரையிட உள்ளோம். யூ-டியூப்பிலும் பதி வேற்றம் செய்வோம்.

மாநாட்டையொட்டி, ஜனவரி மாதத்தில் சென்னையில் ஊடகம், கல்வி, சுகாதாரம், குடிசைப் பகுதி மக்கள் என பத்து தலைப்பு களில் கருத்தரங்கங்கள் நடத்தி அதன் அறிக்கைகளை புத்தக மாக வெளியிட திட்டமிட்டுள் ளோம். உழைப்பாளி மக்களும், இடம்பெயர்ந்துள்ள தொழிலா ளர்களும் அதிகம் இருப்பதால் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சென்னையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இவ்வாறு பாக்கியம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x