Published : 22 Nov 2014 09:43 AM
Last Updated : 22 Nov 2014 09:43 AM

கோயில், பதிவு திருமணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகத்தில் காதல் ஜோடிகளுக்கு பதிவாளர் அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் அறநிலையத்துறை கோயில்களில் பெற்றோர்கள் அனுமதியில்லாமல் திருமணம் செய்யவோ, பதிவு செய்யவோ கூடாது என உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

தமிழகத்தில் சமீப காலமாக கவுரவக் கொலைகள், காதல் திருமணம் செய்தவர்களின் பெற்றோர் தற்கொலை செய்வது, காதல் திருமணங்களால் ஜாதி மோதல்கள், காதலர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இப்பிரச்சினைக்கு முக்கியக் காரணமாக இருப்பது, கலப்புத் திருமணம் செய்வதுதான்.

இந்து திருமணச் சட்டப்படி, பெண்ணின் திருமண வயது 18 ஆகவும், ஆணின் திருமண வயது 21 ஆகவும் உள்ளது.

இந்த வயதில் திருமணம் செய்து கொள்பவர்கள் பக்குவப்படாததால் திருமணமாகி 2 அல்லது 3 மாதங்களிலேயே விவாகரத்து செய்யும் நிலையும் அதிகரித்துள்ளது.

எனவே கோயில் கள், பதிவாளர் அலுவலகங்கள், காவல் நிலையங்களில் பெற்றோர் களுக்கு தெரியாமல் திருமணம் செய்யும் போக்குக்கு கடிவாளம் போட வேண்டும்.

எனவே, இங்கு திருமணம் செய்வதற்காக வருபவர்கள் பெற்றோருடன் வர வேண்டும், அவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என தமிழக காவல்துறை இயக்குநர், தமிழக பதிவுத்துறை ஐ.ஜி மற்றும் இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவுக்கு, தமிழக உள்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பதிவுத்துறை ஐ.ஜி மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x