Published : 30 Jun 2015 01:14 PM
Last Updated : 30 Jun 2015 01:14 PM

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்பீர்: கருணாநிதி உருக்கம்

பொதுமக்கள் போக்குவரத்துக்காக செலவிடும் சக்தியை அறிந்து, அதற்கேற்ப மெட்ரோ ரயில் கட்டணங்களைக் குறைத்து அறிவித்திட முன் வரவேண்டும் என்று இத்திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்து, அதற்கான பணிகளைத் தொடங்கிய திமுக ஆட்சியின் முதல்வர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்" என்று கருணாநிதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை, சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட வேண்டுமென்று முதன் முதலில் குரல் கொடுத்து, அதற்கான பணிகளைத் தொடங்கிய தி.மு.க ஆட்சியின் முதல்வர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன் என்று வலியுறுத்துகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டம், மாநகரத்தின் மிகப் பெரிய போக்குவரத்துத் திட்டம். 14,600 கோடி ரூபாய்க்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதித் திட்டம்.

அந்தத் திட்டத்தின் ஒரு கட்டமாக சோதனை ரயிலைத் துவக்கி வைப்பதற்கே நேரில் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, தற்போது அந்தத் திட்டத்தின் தொடக்க விழாவிற்குக் கூட நேரில் செல்லாமல் அதன் மதிப்பைக் குறைப்பதற்காகவே, வீடியோ கான்பரன்ஸ் மூலமாகத் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசும், மாநில அரசும் சரிசமமாக முதலீடு செய்துள்ள போதிலும், மரியாதைக்காகக் கூட, மத்திய அரசின் அமைச்சர்கள் யாரையும் இந்தத் தொடக்க விழாவிற்கு அழைத்ததாகத் தெரியவில்லை.

மேலும் இந்தத் திட்டம் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் அல்லவா? அதனால் ஆட்சிக்கு வந்தவுடன் மெட்ரோ ரயில் திட்டத்தை விட மோனோ ரயில் திட்டம் தான் சிறந்தது என்று ஜெயலலிதா கூறினார். பின்னர் அவரே மெட்ரோ திட்டத்தை ஏற்றுக் கொண்டார். அதன்பின்னரும் இந்தத் திட்டத்தைத் தொடங்காமல் சில நாட்களைக் கழித்தார்.

மெட்ரோ ரயில் தொடங்குவதைத் தாமதித்துத் தள்ளிக் கொண்டே போனால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்ததற்குப் பிறகு, தற்போது வேறு வழியில்லாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இவ்வளவு பெரிய திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியும், கெட்ட பெயரும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே, இதற்கான கட்டணம் அதிக அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பல கட்சிகளின் தலைவர்களும் புகார் கூறியிருக்கிறார்கள்.

டெல்லியில் மெட்ரோ ரயில் கட்டணமாக வசூல் செய்வதைப் போல 250 சதவிகித அளவுக்கு இங்கே மிக அதிகமாகக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பயணம் செய்யும்பொது மக்களின் நலன் கருதித் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் குறை ஏற்படாத வகையில் உடனடியாக தமிழக அரசும், மெட்ரோ நிறுவனமும் இணைந்து பொது மக்கள் போக்குவரத்துக்காக செலவிடும் சக்தியை அறிந்து, அதற்கேற்ப மெட்ரோ ரயில் கட்டணங்களைக் குறைத்து அறிவித்திட முன் வரவேண்டும்.

இதனை, சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட வேண்டுமென்று முதன் முதலில் குரல் கொடுத்து, அதற்கான பணிகளைத் தொடங்கிய தி.மு.க ஆட்சியின் முதல்வர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x