Published : 20 Mar 2017 09:45 AM
Last Updated : 20 Mar 2017 09:45 AM
இன்று சிட்டுக்குருவிகள் தினம்
சிட்டுக்குருவிகள், கைக்கு எட்டிய தொலைவில் நம் கண்முன் வீடுகளில் கூடு கட்டி வாழ்ந்த உறவுகள். ‘கீச்..கீச்…கீச்’ சத்தத்துடன் நித்தமும் வீட்டுக்குள் அங்கும், இங்குமாக ஓடியாடி விளையாண்ட காலம் மலையேறிப்போய், இந்த தலைமுறையினர் சிட்டுக்குருவிகளை புத்தகங்களிலும், யூடியூப் வீடியோக்களிலும் பார்க்கக்கூடிய அரிய வகை பறவையாகிவிட்டன. கிராமங்களில்கூட மிக அபூர்வமாகவே காணப்படுகின்றன. வைக்கோலையும், சிறு குச்சிகளைக்கொண்டும் மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் நிலைக்கண்ணாடி, போட்டோக்கள் பின்புறமும் கூடு கட்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகள் இன்று எங்கு இருக்கின்றன, எப்படி இருக்கின்றன, என்ன செய்கின்றன என்பது தெரியவில்லை. பொதுவாக பறவைகளை சூழலியலின் அறிகுறிகள் என்பார்கள். இன்று சிட்டுக்குருவிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் நாளை நமக்கும் வரலாம்.
சுயநலமாகவே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட மனிதர்கள், என்று நம்மை சார்ந்திருக்கும் மற்ற உயிரினங்களுக்காக வாழ பழகப்போகிறமோ அன்றுதான், சிட்டுக்குருவிகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். இந்த நினைவுறுத்தலுக்காகவும், விழிப்புணர்வுக்காகவுமே ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20-ம் தேதி சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து மதுரை திருமங்கலம் பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது: 20 ஆண்டுக்கு முன் செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது, ஊரெங்கும் அலைக்கற்றைகளின் நன்மைகள் பற்றி பேசியபோது அவற்றின் தீமைகளைப் பற்றி சிலர் பேசினர். அவர்கள், செல்போன் டவரால் சிட்டுக்குருவிகளை காணோம் என்றனர். அப்போதுதான் நாம் கண் விழிக்கும்போது கண் விழித்து பரபரப்பாக திரியும் அந்த சின்னச்சிறு ஜீவனைத் தேடினோம். நகர வாசிகள் கண்களில் அது தென்படவே இல்லை. உடனே அனைவரும் சிட்டுக்குருவி அலைக்கற்றை கதிர்வீச்சால் சாகிறது. அதன் முட்டைகள் குஞ்சு பொறிப்பது இல்லை என்று சொல்லத் தொடங்கினர். பலர் இதை மட்டுமே சிட்டுக்குருவிகள் மாயமானதற்கு காரணம் என்றும் நம்பினர். ஆனால், உண்மை அது இல்லை. இதுவும் ஒரு காரணம். இது தவிர வேறு காரணங்களும் உள்ளன.
காற்றோட்டம் இல்லாத கண்ணாடி கதவுகளால் மூடப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களாக மாறிய வயல்வெளிகள், தோட்டங்கள், சாலைகளுக்காகவும், மின் கம்பங்களுக்காகவும் வெட்டப்பட்ட மரங்கள் போன்றவற்றாலேயே சிட்டுக்குருவிகள் இனம் நம்மைவிட்டு பிரிந்து செல்லத் தொடங்கின. மணல் பரவி கிடந்த சாலைகள் முழுவதும் தார்களும், சிமென்ட்டும் கொட்டி பூசி, மழை பெய்தால் மண்ணின் வாசம்கூட வராமல் சாக்கடையாக ஓடும் சுற்றுச்சூழல் சிட்டுக்குருவிகளுக்கு பிடிக்கவில்லை. கரியமில வாயுவை அள்ளிக் கொட்டும் வாகனங்களின் வேகம் சாலைகள், தெருக்களில் சிட்டுக்குருவிகளை நடமாட முடியாமல் செய்துவிட்டன. கூடு கட்ட குச்சிகள், வைக்கோல் இல்லை. முன்பெல்லாம் பலசரக்கு கடை வாசலில் சிறுதானியங்கள், அரிசி என்று பல சிதறிக் கிடக்கும். ஆனால், இன்றோ அனைத்து பொருட்களையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். தற்போதைய குடியிருப்புப் பகுதிகளில் ஈ, கொசுக்களைத் தவிர, தாவர உண்ணிகளான பூச்சிகள் இல்லை. இதனாலேயே சிட்டுக்குருவிகளை காணவில்லை. ஆனால், செல்போன் டவர்கள் மீது ஒட்டுமொத்த பழியையும் சுமத்தி தப்பித்துக்கொள்கிறோம் என்றார்.
என்ன செய்யலாம்?
முன்பெல்லாம் வீடுகளின் மண் ஓடுகளின் கீழேயும், வேலி, புதர்ச் செடிகளின் இடையேயும் கூடுகளை கட்டி வாழும். தற்போது நகர் முழுவதும் நாலாபுறமும் அடைக்கப்பட்ட கான்கிரிட் வீடுகளைத்தான் பார்க்க முடிகிறது. தோட்டங்களும் இல்லை. அதனால், சிட்டுக்குருவிகள் குடியிருக்க குறைந்தபட்சம் வீடுகளில் சிறிய மண் கலயங்கள், அட்டை பெட்டிகள் வைக்கலாம். மாடித்தோட்டம், பறவைகள் குளிக்க, குடிக்க சிறிய தண்ணீர் தட்டுகள் வைக்கலாம். அவைகள் இரையெடுத்து செல்ல தானிய குவளைகள் வைக்கலாம். இன்னிசை பாடும் பறவைகளை நம் அண்டை வீட்டுக்காரராய், நம்மில் ஒருவராய் அடைவதைப்போல வேறு சந்தோஷம் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT