Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM
விஷவாயு கசிவால் 7 பேர் பலியான பெருந்துறை சாயத் தொழிற்சாலைக்கு வருவாய்துறை அதிகாரிகள் புதன்கிழமையன்று சீல் வைத்தனர். அந்த ஆலையின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஜவுளிகளுக்கு சாயமேற்றுதல் மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமையன்று விஷ வாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறி 7 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து விபத்து நடந்த ஆலையை வருவாய்துறை, காவல்துறை, மாசுகட்டுப்பாடு வாரியம், தொழில் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் பரிந்துரையின்பேரில், செவ்வாய்க்கிழமை இரவு ஆலை வளாகத்துக்கான மின்சார விநியோகத்தை மின்வாரியம் துண்டித்தது.
இதையடுத்து சாய ஆலைக்கு சீல் வைக்க வருவாய் கோட்ட அலுவலர் குணசேகரன் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை காலை ஆலைக்குச் சென்றனர். 11 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஆலையில், சாயமேற்றும் பணியை மேற்கொள்ளும் இயந்திரங்கள் உள்ள பிரிவுக்கு அவர்கள் சீல் வைத்தனர்.
சாய ஆலையில் ஆய்வு செய்த பல்வேறு துறை அதிகாரிகள் கூறியதாவது:
விபத்து நடந்த சாய ஆலையில் பெரும்பாலான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாகப் பணிசெய்வது குறித்து, ஆலை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆலையில் உள்ள அனைத்து இயந்திரங்களின் நிலை குறித்து, கால வரிசைக்கிரமப்படி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கழிவுகளைத் தேக்கி வைக்கும் தொட்டிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளன. தொட்டியில் கசிவுகள் உள்ளதா, நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் அப்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விபத்து நடந்த அன்று பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தாமல், ஆலை அதிகாரிகளுக்கு முன் கூட்டியே தெரிவிக்காமல் பணியாளர்கள் இறங்கியதே இறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் நாடகம்
இதுகுறித்து சி.ஐ.டி.யு., ஈரோடு மாவட்ட தலைவர் சுப்பிரமணியத்திடம் பேசியபோது, “விபத்து நடந்த ஆலையில் ஊழியர்களின் பாதுகாப்புக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதுகாப்பு அதிகாரி பணியிடம் நிரப்பப்படவில்லை என்று அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். 7 பேர் இறந்தது மட்டுமல்லாது, பலர் மயக்கமாகியுள்ளனர். ஆலை வளாகத்தில் முதலுதவிக்கான எந்த வசதியும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்துள்ளது.
மாசுக் கட்டுப்பாடு, தொழில்துறை, வருவாய் துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை ஆலைகளில் முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளாமலே, நிர்வாகத்துக்கு ஆதரவாக சான்றிதழ்களை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வாறு தாங்கள் வழங்கிய சான்றிதழ்கள் தவறானது என்பதைத்தான் இதுபோன்ற விபத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. விபத்து நடந்த ஆலையில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளாமல் ஏற்கெனவே தாங்கள் வழங்கிய சான்றிதழ்கள் தவறானது என்பது வெளியில் தெரிந்து விடக்கூடது என்பதற்காக, ஆலையில் அனைத்து விதிகளும் சரியாக பின்பற்றப்பட்டுள்ளன என தற்போது அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT