Last Updated : 25 Jul, 2016 02:10 PM

 

Published : 25 Jul 2016 02:10 PM
Last Updated : 25 Jul 2016 02:10 PM

கபாலி பரபரப்பிலும் அரங்கம் நிறைந்த அவன்தான் மனிதன்- திருச்சியில் நடிகர் சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் தமிழகம் மட்டுமின்றி, உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சிவாஜிகணேசனின் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் திருச்சி திரையரங்கில் நேற்று அரங்கு நிறைந்த காட்சியாக திரையிடப்பட்டது, அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில் மறைந்த ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 1975-ல் வெளியானது ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் நட்பின் ஆழத்தை வலியுறுத்தும் படமாகும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இதில், சிவாஜிகணேசன், முத்துராமன், ஜெயலலிதா, மஞ்சுளா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடத்துள்ளனர்.

வழக்கமாக வார விடுமுறை நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கடந்த 22-ம் தேதி நடிகர் ரஜினி நடித்து வெளியான ‘கபாலி’ படம், திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, கோடிக்கணக்கில் வசூலித்து வரும் நிலையில், திருச்சி மேலரண் சாலையில் உள்ள கெயிட்டி திரையரங்கில் நேற்று முன்தினம் ‘அவன்தான் மனிதன்’ திரைப்படம் வெளியானது.

படம் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே வழக்கத்தைவிட அதிக அளவில் கூட்டம் வந்த நிலையில், நேற்று மாலை நேரக் காட்சியில் திரையரங்கு நிறைந்தது. இங்குள்ள 324 டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன. இது, சிவாஜிகணேசனின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சிறப்பு அழைப்பாளர் அண்ணாதுரை கூறும்போது, “நடிப்பால் மக்களைக் கவர்ந்த சிவாஜியின் நினைவுகள் மக்களைவிட்டு மறையவில்லை என்பதை, இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” என்றார்.

திரையரங்கு மேலாளர் இக்பால் கூறும்போது, “இந்தப் படத்தை திரையிடப்பட்ட முதல் நாளிலிருந்தே அதிக கூட்டம் உள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்கில் ‘ஹவுஸ்புல் போர்டு’ மாட்டியுள்ளோம். டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் சிலர் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x