Published : 09 Feb 2014 11:30 AM
Last Updated : 09 Feb 2014 11:30 AM
கூடங்குளத்தில் சனிக்கிழமை முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அணு உலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட் டிருந்தது.
இதையடுத்து 500 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டும் முன்பு பலமுறை அணுஉலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன.
இதேபோல் 750 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டுமுன் அணுஉலை, டர்பைன் ஆகியவை நிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி கடந்த மாதம் 29-ம் தேதி அணு உலையில் இருந்து 680 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டபோது அணு உலை, டர்பைன் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன.
இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை அணுசக்தி ஒழுங்கமைப்பு வாரியத்திடம் அளிக்கப் பட்டது. வாரியத்தின் அனுமதி கிடைத்ததை அடுத்து சனிக்கிழமை அணுஉலை மற்றும் டர்பைன் மீண்டும் இயக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்பட்டதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த கட்ட சாதனை..
சனிக்கிழமை நண்பகல் 1 மணி அளவில் மின்னுற்பத்தி 47 மெகாவாட் வரையில் இருந்ததாகவும், அடுத்த 72 மணி நேரத்தில் மின்உற்பத்தி புதிய சாதனை அளவாக 750 மெகாவாட்டை எட்டும். இதனிடையே மின் உற்பத்தி 700 மெகாவாட்டை எட்டுமுன் ஒருசில ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT