Published : 02 Jun 2016 09:08 AM
Last Updated : 02 Jun 2016 09:08 AM

கோவையில் திமுக தோல்விக்கு உள்ளடிதான் காரணம்: நிர்வாகிகள் கூட்டத்தில் வேட்பாளர்கள் பகிரங்க குற்றச்சாட்டு

கட்சி நிர்வாகிகளின் உள்ளடி வேலை களால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பதை நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர், தேர்தலில் போட்டியிட்டு தோற்ற திமுக வேட்பாளர்கள்.

சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் திமுக வென்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 4 மாவட்டச் செயலாளர்களில் 3 பேருக்கு சீட் கிடைக்காததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த அதிருப்தி காரணமாக முக்கிய நிர்வாகிகளும், அவரின் ஆதரவாளர்களும் தேர்தல் பணிகள் செய்யாமல், எதிரணிக்கு சாதகமாக உள்ளடி வேலை பார்த்ததாக குற்றச்சாட்டுகள் கட்சிக்குள்ளேயே எழுந்தன.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கருணாநிதியை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கிய ஒரு வேட்பாளர், கண்ணீர் விட்டதாகவும், கருணாநிதியும் கலங்கியதாகவும் கோவை திமுகவினரிடம் செய்திகள் பரவின.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த கோவை மாநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் 48 வட்ட கிளைச் செயலாளர்கள், 5 பகுதிச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அந்த கூட்டத்தில், தோல்விக்கான காரணம் அலசப்பட்டுள்ளது.

ஒரு வேட்பாளர் ‘என்னை தோற்கடித்தது கட்சியில் உள்ள சில விஷக்கிருமிகள்’ என்று குறிப்பிட்டு, அந்த நிர்வாகிகளின் பெயர் பட்டியலை எழுத்துப்பூர்வமாக முக்கிய நிர்வாகிகளிடம் அளித்தாராம்.

இன்னொரு வேட்பாளரோ, யாரெல்லாம் தனக்கு உள்ளடி வேலைகளை எப்படியெல்லாம் செய்தார்கள் என்பதை பெயர் குறிப்பிடாமல் சூசகமாகவே தெரிவித்து, அவர்களைப் பற்றி தலைமையிடமே தெரிவிக்கப் பட்டுள்ளது என குறிப்பிட்டாராம்.

இக்கூட்டத்தில் பங்கேற்று வந்த துணை அமைப்பு பொறுப்பாளர் ஒருவர் கூறும்போது, ‘எங்கள் மாவட்டத்தில்தான் ஒரு தொகுதியில் வேட்பாளரை ஜெயிக்க வைத்து, மற்ற வேட்பாளருக்கு குறிப்பிட்ட சில ஏரியாக்களில் முன்னணியும் காட்டினோம். அதிலேயே இந்த அளவுக்கு உள்ளடி நடந்திருக்கிறது என்றால் மற்ற தொகுதிகள் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் தோற்றவை. அதில் எப்படியெல்லாம் உள்ளடி நடந்திருக்கும்!.

கோவை பிரச்சாரத்துக்கு ஸ்டாலின் வந்தபோது, 2 பகுதிக் கழக செயலாளர்கள் மீது கொடுக்கப்பட்ட புகார் கடிதம் மீது அவர் விசாரித்தார். அதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அந்த புகாருக்குள்ளான நிர்வாகி, சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் சென்று தான் நன்றாக தேர்தல் பணி செய்வதாக கடிதம் வாங்கி வந்து சமர்ப்பித்து விட்டார். இப்போது அதே நிர்வாகிகள் மீது வேட்பாளர் குற்றம் தெரிவிப்பதுதான் வேடிக்கை‘ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘எங்கள் மாவட்ட கழகக் கூட்டம் நடந்ததை பார்த்து தற்போது கோவை மாநகர் வடக்கு மாவட்டமும் நகர கழக அலுவலகத்தில் கூட்டம் நடத்தியுள்ளது. அவர்கள் எங்களை போல் அல்லாமல் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தை மட்டுமே நடத்தியுள்ளனர். அதிலும், தோற்ற வேட்பாளர்கள் வெளிப்பட குமைந்து தள்ளியிருக்கிறார்கள். அதில், ‘தேர்தலின் போது பணிகளை முடுக்கிவிட வார்டு வாரியாக என்ன அட்டவணை போட்டீங்க? அதில் யாரெல்லாம் என்னென்ன பணிகள் செய்தார்கள். அதை காட்டத்தயாரா? தேர்தலின் போது தினமும் வரவு செலவு கணக்கு என்ன கொடுத்தீங்க?’ என்றெல்லாம் வெளிப்படையாகவே கேட்டுள்ளனர். அதற்கு எதிர்தரப்பில் எந்த பதிலும் இல்லை. இதேபோல், கோவை புறநகர் மாவட்டங்கள் இரண்டிலும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதில் என்ன நடக்குமோ தெரியவில்லை. இந்த சமயத்தில் கூட்டம் போட்டு அதில் எடுக்கப்பட்ட முடிவை தலைமைக்கு தீர்மானமாக தெரிவிக்க வேண்டும்.

அந்த வகையில் நடந்த இரண்டு கூட்டங்களிலும் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கு வார்டுவாரியாக பலப்படுத்துவது, ஆக்கப்பூர்வமாக செயல்படுவது’ என்று வழக்கமான தீர்மானங்களையே போட்டு கூட்டத்தை முடித்துள்ளனர். இருந்தாலும், இந்த காரசார விவாதத்தையும், புகாரையும் முன்னிறுத்தி கட்சித் தலைமை நிச்சயம் முக்கிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x