Published : 30 Sep 2013 09:14 AM
Last Updated : 30 Sep 2013 09:14 AM

சென்னை மேயர் மீது வழக்குத் தொடருவோம்: மு.க.ஸ்டாலின் பகிரங்க சவால்

சென்னையில் மேயராக நானும், மா.சுப்பிரமணியனும் இருந்தபோது சாலை சீரமைப்பில் முறைகேடு செய்ததாக இப்போதைய மேயர் சைதை துரைசாமி பேசி வருகிறார். இது சம்பந்தமாக விளக்கம் கேட்டிருக்கிறோம். உரிய பதில் இல்லையென்றால், அவர் மீது வழக்கு தொடருவோம் என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தாது மணல் விவகாரத்தில் அதன் உரிமையாளர்களையும், அவர்கள் அடைந்து வரும் லாபத்தையும் காப்பாற்றவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் சாலை கள் மிக மோசமாக உள்ளன.

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில், கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள்தான் அதிகம் நடக்கின்றன. சென்னை தலை நகரம் கொலை நகரமாகவும், தமிழ்நாடு கொலை நாடாகவும் மாறி வருகிறது.

இலங்கைத் தமிழருக்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையிலான டெசோ அமைப்பின் மூலம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

மோடியின் தமிழக வருகையை தமிழக மக்கள் எவ்வாறு பார்த்தார்களோ, அதே போலத்தான் நாங்களும் பார்க்கிறோம் என்றார்.

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?

இதனிடையே,சென்னை மாநகராட்சியில் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தகாலத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவித்த மேயர் சைதை துரைசாமியை மா.சுப்பிரமணியன் விவாதத்திற்கு அழைத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2 ஆண்டுகளாக மேயர் சைதை துரைசாமி கடந்த கால மாநகராட்சி நிர்வாகத்தின்போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், அதை விரைவில் வெளிப்படுத்தப் போவதாகவும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தார்.

அவர், 28-ந் தேதி நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் ரூ.292.31 கோடி நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், நான் மேயராக இருந்த காலத்தில் ரூ.125 கோடி நிவர்த்தி செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளதாக கூறியிருக்கிறார். மேயருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இது சம்பந்தமாக நீங்கள் விவாதித்து எங்கள் மீது குற்றம் சுமத்த தயாராக இருந்தால், நீங்கள் எங்கே அழைத்தாலும் அங்கே வந்து உங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்குச் சொந்தமான ஜெயா தொலைக்காட்சியில் விவாதத்தை வைத்துக் கொண்டால்கூட உங்களுடன் விவாதிக்க தயாராக உள்ளேன். எனவே, விவாதத்திற்கான தேதியையும், நேரத்தையும் உடனடியாக அறிவிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x