Published : 11 Apr 2017 03:56 PM
Last Updated : 11 Apr 2017 03:56 PM
சென்னை அண்ணாசாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் காரணமாக ஏற்பட்டு வரும் தொடர் பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் சென்னை வாசிகளுக்கிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தி இந்து தமிழ் இணையதளத்துக்கு சென்னை மெட்ரோவின் தலைமை பொது மேலாளர் உமேஷ் ராய் அளித்த சிறப்பு நேர்காணல்,
1. சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளால் ஏற்பட்டுள்ள தொடர் விரிசல் மற்றும் பள்ளங்களுக்கு என்ன காரணம்?
முதலில் நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். சாலைகளில் ஏற்பட்ட இந்தப் பள்ளங்கள் மற்றும் விரிசல்களுக்கு மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை அண்ணா சாலையில் சிறிய அளவிலான விரிசலே ஏற்பட்டுள்ளது. நிலத்துக்கடியில் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது விரிசல் ஏற்பட்ட பகுதி பாதுகாப்பாக உள்ளது.
2. மண் வலுவிழப்பு காரணமாக இத்தகைய விரிசல்களும் பள்ளங்களும் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே?
கடந்த வாரம் சென்னை அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கு மண் வலுவிழப்புதான் காரணம். மெட்ரோ ரயில் பணிக்காக நிலத்துக்கடியில் இயந்திரத்தின் மூலம் துளையிடும்போது ஏற்படும் அழுத்தத்தில் சாலையில் இம்மாதிரியான பள்ளங்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
3. மெட்ரோ ரயில்கள் அமைக்கப்படுவதற்கான நிலத்தன்மை இல்லாத இடங்களில் அதன் கட்டுமானங்கள் நடைபெறுகின்றன என சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்?
நான் இதனை முற்றிலும் மறுக்கிறேன். நாங்கள் ஒவ்வொரு அடியாக ஆராய்ச்சி செய்தே மெட்ரோ ரயிலுக்கான பணிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
4. சென்னை அண்ணா சாலையில் அடுத்தடுத்து நடந்த விபத்துக்களின் மூலம் உருவாகியுள்ள அச்சத்தைப் போக்க தாங்கள் மெட்ரோ ரயில் நிர்வாகம் என்ன செய்யப் போகிறது?
இது வழக்கமாக ஏற்படுகிற விரிசல்கள்தான். இதற்கு முன்னரும் டெல்லி, பெங்களூரு மெட்ரோ பணிகளின் போது விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய விரிசல்களால் இதுவரை எந்தப் பாதிப்பு ஏற்பட்டதில்லை. இத்தகைய விரிசல்கள் அழுத்தத்தினால் ஏற்படுபவை. இதனைக் கண்டு மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்
5. விரிசிலை சீராக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் என்ன? எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் ஏற்படாமலிருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது?
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் மற்றும் விரிசல்கள் முடிந்தளவு உடனடியாக மெட்ரோ ஊழியர்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு, சில மணி நேரங்களிலே அந்த விரிசல் சரி செய்யப்பட்டன. தற்போது வாகன போக்குவரத்து அப்பகுதியில் சீரடைந்துள்ளது.விரிசல் ஏற்பட்ட காரணம் குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் செயல்படுவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT