Published : 11 Feb 2014 01:27 PM
Last Updated : 11 Feb 2014 01:27 PM

அரிசி, பருத்தி மீதான சேவை வரியை ரத்து செய்ய ராமதாஸ் கோரிக்கை

அரிசி, பருத்தி ஆகிய வேளாண் விளைபொருட்கள் மீதான சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "அரிசி, பருத்தி ஆகிய வேளாண் விளைபொருட்கள் மீது சேவை வரி விதித்து மத்திய நிதித்துறை ஆணையிட்டிருக்கிறது.

அதன்படி, இனி அரிசி, பருத்தி ஆகியவை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு வாடகை, அவற்றை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான வாடகை ஆகியவற்றின் மீது 12.36% விதிக்கப்படும் என்று நேரடி வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.

வேளாண் விளைபொருட்கள் மிகவும் அத்தியாவசியமானவை என்பதால் அவற்றின் மீது எவ்வித வரியும் விதிக்கப்படுவதில்லை.

நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் குறித்த சேவைகளுக்கு சேவைவரி விதிக்கப்படும் போதிலும், வேளாண் பொருட்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், திடீரென கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்த ஆணையில், அரிசி மற்றும் பருத்தியை வேளாண் விளைபொருட்களாக கருத முடியாது என்பதால் அவற்றின் மீதான சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த வரி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் முன்தேதியிட்டு வசூலிக்கப்பட இருக்கிறதாம்.

அரிசி மீது சேவைவரி விதிக்கப்பட்டால் அதன் விலை கடுமையாக உயரும். இதனால் பொதுமக்களும், அரிசி வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதேபோல் பருத்தி விலை உயர்வால் பஞ்சாலைகளும், நெசவாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரிசி, பருத்தி மீதான சேவை வரியை மத்திய அரசு உடனடியாக இரத்து செய்ய வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x