Published : 02 Jun 2017 11:57 AM
Last Updated : 02 Jun 2017 11:57 AM
கடந்த மே 23-ம் தேதி பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காகசந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது நாடெங்கும் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
இதில் சில பிரச்சாரகர்கள் மத்திய அரசு உத்தரவு இறைச்சிக்காக அனைத்து விற்பனைகளையும் அது தடை செய்யவில்லை, விலங்குச் சந்தைகள் மூலம் இறைச்சிக்காக விற்கக் கூடாது என்றுதான் கூறியுள்ளது என்று சிலர் கூறிவருகின்றனர். சரி விலங்குச் சந்தைகள் அல்லாது வேறு வழிகளில் இறைச்சிக்காக விற்பனை செய்து விட முடியுமா என்பதே கேள்வி. இதற்குப் பதில் அவ்வளவு எளிதில் இறைச்சிக்காக வேறு வழிகளில் விற்று விட முடியாது என்பதே உத்தரவு நமக்கு தரும் விடையாகும். அல்லது இறைச்சிக்காக மாடுகளை விற்க வேண்டுமென்றால் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், முறைப்படுத்தல்களுக்கு ஆட்பட வேண்டும்.
பங்குச்சந்தையை எப்படி செபி கட்டுப்படுத்துகிறதோ, அதே போல் விலங்குச் சந்தைக் குழு விலங்கு விற்பனைகளை முறைப்படுத்தும் அமைப்பாக செயல்படும். இந்தப் புதிய உத்தரவில் எருமைகளையும் சேர்த்தது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது, காரணம் எருமை இறைச்சி ஏற்றுமதித் தொழில் கடுமையாக பாதிக்கும் என்று எருமை இறைச்சி ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பால் கொடுப்பது நின்று போன எருமைகளை வைத்துக் கொண்டு விவசாயிகள் என்ன செய்ய முடியும்? அதனை கால்நடைச் சந்தைகள் மூலமே அவர்கள் விற்க முடியும். இது தற்போது புதிய உத்தரவினால் கடுமையாக பாதிப்படையும் என்பதே மற்றொரு தரப்பு வாதமாகும்.
இதற்கு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ள ஒரு பத்தியைப் பார்த்தாலே நமக்கு புரியும். அதாவது விலங்கு/கால்நடைச் சந்தை என்பது என்ன என்று அறிவிப்பாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது: “means a market place or sale-yard or any other premises or place to which animals are brought from other places and exposed for sale or auction and includes any lairage adjoining a market or a slaughterhouse and used in connection with it and any place adjoining a market used as a parking area by visitors to the market for parking vehicles and includes animal fair and cattle pound where animals are offered or displayed for sale or auction”.
இதை ஒருவாறு இப்படிச் சொல்லலாம்: விலங்குச் சந்தை என்பது வேறு இடங்களிலிருந்து ஒரு இடத்துக்கு விலங்குகளைக் கொண்டு வந்து விற்பனை அல்லது ஏலம் விடும் சந்தை அல்லது விற்பனைக் கூடம் அல்லது விலங்குகளைக் கொண்டு வந்து வைக்கும் எந்த ஒரு வளாகமும் விலங்குச் சந்தையே. இதில் சந்தையை ஒட்டிய விலங்குகள் தற்காலிக ஒய்விடம் அல்லது இறைச்சிகூடம், இறைச்சிக்கூடத்துக்கு அருகில் உள்ள பகுதி ஆகியவை அருகே விலங்குகளைக் கொண்டுசென்றால் அதுவும் விலங்குச் சந்தையாகவே கருதப்படும்.
அதேபோல் வழிபாட்டுக் கூடங்களில் நேந்துவிடப்படுவதற்காக காட்சிப் படுத்தப்படும் விலங்குகள் அல்லது விற்கப்படும், ஏலத்துக்கு விடப்படும் விலங்குகள். இவையெல்லாம் விலங்குகள் சந்தையாகவே கருதப்படும். விலங்குச் சந்தைக்கான மத்திய அரசின் அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தைப் புரிந்து கொண்டால் விலங்குகளை தனிநபர்கள் விற்பதே கூட கடினம் என்பது புரியவரும்.
இறைச்சிக்காகவோ, பலியிடுதலுக்காகவோ விலங்குகளை விற்கவோ வாங்கவோ முடியவே முடியாது என்பதுதான் உத்தரவின் சாராம்சம். இந்த உத்தரவின்படி மாடு உள்ளிட்ட கால்நடையை வாங்குபவர்,
1. இறைச்சிக்காக அதை விற்கக் கூடாது.
2. மாநில கால்நடைப் பாதுகாப்பு,, பராமரிப்புச் சட்டங்களை பின்பற்ற வேண்டும்.
3. மதச்சம்பிரதாயங்களுக்காக பலியிடுதல் கூடாது.
4. வெளிமாநிலத்தவருக்கு மாநில சட்டவிதிகள் கூறுவதன் படி அனுமதியின்றி பசுவையோ, காளையையோ, எருமைகளையோ, ஒட்டகங்களையோ விற்க முடியாது.
எனவே சந்தை மூலம் கால்நடைகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் ஏகப்பட்ட ஆவணங்கள் இருதரப்பிலும் தேவைப்படும் இதனை கட்டுப்படுத்தும் அமைப்புதான் விலங்கு சந்தை கமிட்டி என்பதாகும். இப்போது வர்த்தகர்கள் என்ன செய்வார்கள்? விவசாயிகளிடமிருந்து நேரடியாக மாடுகளை வாங்கி அதனை விலங்குச் சந்தைக்குக் கொண்டு செல்லாமல் இறைச்சிக் கூடத்துக்கு அனுப்புவார்கள்.
இதனால் தனி விவசாயிகள் உற்பத்தி தராத தங்கள் பசுவையோ எருமையையோ விற்பதற்கான வழிமுறைகள் மிகவும் குறைவாகியுள்ளது. இந்த இடத்தில்தான் வர்த்தகர்கள் என்ற பிரிவில் கார்ப்பரேட்டுகள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
இது மாட்டிறைச்சி உண்பதற்கான தனிமனித உரிமைப் பிரச்சினையோ, சிறுபான்மையின உரிமைப் பிரச்சினையோ அல்ல மாறாக முறைப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல், அனைத்தையும் தன் பார்வைக்குக் கீழ் கொண்டு வந்து கட்டுப்படுத்துதல் என்ற மத்திய அரசின் பொருளாதாரக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்குள் அனைத்தும் கொண்டு வரப்படுவதன் ஒரு சந்தர்ப்பமே, நிகழ்வே இந்தச் சட்டத்திருத்தங்களும் புதிய உத்தரவும். எனவே இதில் நேரடியாக பாதிக்கப்படுவது கால்நடை விவசாயிகளே.
மேலும் இந்த விவகாரத்தை தனிப்பட்ட ஒரு விவகாரமாகப் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. மத்திய அரசு தொடர்ந்து அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும், அதிகாரத்தையும் முறைப்படுத்தல் என்ற பெயரில் மையப்படுத்தும் உந்துதலில் செய்து வருகிறது.
எனவே பணமதிப்பு நீக்கத்திற்குக் காரணமாக கறுப்புப் பணம், கள்ள நோட்டு, பயங்கரவாத நிதி போன்ற பிரச்சினைகள் கூறப்பட்டாலும் அது முறைசாரா பொருளாதாரம் என்று கூறப்படும் இன்ஃபார்மல் இகாமனியை இலக்காகக் கொண்டதே.
இத்தகைய முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளே கறுப்புப் பண உருவாக்கத்துக்கு முக்கியக் காரணம் என்று பெரிய அளவில் கார்ப்பரேட் நிதியுதவியுடன் ஆய்வுகள் நடைபெற்று வருவதும் கவனிக்கத்தக்கது. உதாரணமாக பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் ஆய்வு லாபிகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
இன்பார்மல் இகானமி என்பது பெரும்பாலும் இந்தியாவில் பணப்புழக்கம் அதிகம் நடமாடும் ஒரு பெரிய அன்றாட வெகுஜனப் பொருளாதார, வாழ்வாதரமாகும். இதில்தான் சிறுவியாபாரிகள், சிறு வணிகங்கள் பெரிய அளவில் நிலைபெற்று வந்துள்ளன.
பணமதிப்பு நீக்கம் மூலமும் அதையொட்டிய மோடியின் கனவாகிய டிஜிட்டல் இந்தியா என்ற லட்சியத்தையும் சேர்த்து பணப்புழக்கத்தைக் குறைப்பதன் மூலம் முறைசாரா பொருளாதாரத்தை ஒரு மையக் கண்காணிப்புக் கொண்டு வந்து அனைத்தையும் கார்ப்பரேட் மயமாக்குவதுதான் குறிக்கோள். அதேபோல்தான் ஜி.எஸ்.டி என்ற சரக்கு மற்றும் சேவை வரி இந்தியச் சந்தையை ஒருங்கிணைக்கும் வரித் திட்டம் மூலம் இதுவும் மையப்படுத்தும் உந்துதலே இதன் மூலம் அன்னிய மூலதனங்களுக்கு இந்திய சந்தைகளை கட்டுப்பாடின்றி திறந்து விடுவது நோக்கமாகும்.
எனவே அனைத்தையும் மத்திய அரசின் மையக்கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வருவதன் ஒரு அங்கமே இந்த விலங்குச் சந்தை முறைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்தல் அல்லது கட்டுப்பாட்டுக்கான திட்டமும் ஆகும். அனைத்து வாழ்வாதார பொருளாதார புலங்களையெல்லாம் எந்தெந்த வழிகளெல்லாம் முறைப்படுத்தல் என்ற பெயரில் மையக் கட்டுப்பாட்டுக்கும் கண்காணிப்புக்கும் கொண்டு வர முடியுமோ அந்தந்த வழிமுறைகளை மத்திய அரசு சட்டத்திருத்தங்கள் மூலம் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன.
எனவே இந்த அனைத்தையும் மையப்படுத்தும் மத்திய அரசின் உந்துதலின் அங்கங்களே, பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மசோதா, விலங்குச் சந்தைக் கட்டுப்பாடுகள், ரயில்வேயில் சில சேவைகளை அவுட் சோர்ஸிங் செய்வது, தனியார்களை உள்ளே நுழைப்பது ஆகிய நடவடிக்கைகளாகும்.
இவற்றை தனித்தனியாகப் பிரித்து பார்க்க முடியாது. ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தை நோக்கி மத்திய அரசு இத்தகைய விஷயங்களை பொருளாதார சீர்த்திருத்தங்கள் என்ற பெயரில் செய்து வருகிறது. சுருக்கமாக பொருளாதாரத்தையும் அதிகாரத்தையும் ஒற்றை மையமாக குவிமையப்படுத்துவதே அதன் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் நலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT