Published : 26 Jan 2014 09:43 AM
Last Updated : 26 Jan 2014 09:43 AM
தமிழகத்தைச் சேர்ந்த 25 போலீஸ் அதிகாரிகள், குடியரசுத் தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையின் 25 அலுவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுகள், தேசிய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய நாட்களில் ஆண்டுக்கு இருமுறை வழங்கப்படுகின்றன.
காவல்துறையில் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் இது, காவல்துறை அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. வீர தீர பணிக்கான காவல் விருது, சிவகங்கை மாவட்டம் திருப்பாசட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் த.ஆல்வின் சுதனுக்கு (மறைவு) வழங்கப்படுகிறது.
தகைசால் பணிக்கான காவல் விருதுகள், ஏடிஜிபி (செயலாக்கம்) சஞ்சய் அரோரா, ஏடிஜிபி (காவல் போக்குவரத்து கழகம்) சுனில்குமார், ஐ.ஜி. (தலைமையிடம்) முகமது ஷகில் அக்தர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பாராட்டத்தக்க பணிக்கான குடியரசுத் தலைவர் விருதுகள் சென்னை போக்குவரத்து காவல் (தெற்கு) இணை கமிஷனர் இரா.தினகரன், சென்னை போக்குவரத்து காவல் (மேற்கு) துணை கமிஷனர் எஸ்.பன்னீர் செல்வர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12-வது அணி (மணிமுத்தாறு) துணை தளவாய் சி.க்ருஸ் மைக்கேல், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக டிஎஸ்பி சி.பவுலின், கடலூர் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேல், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-வது அணி (வீராபுரம்) உதவி தளவாய் சி.சார்லஸ், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (கடலூர்) டிஎஸ்பி ஜே.உதயசங்கர், சென்னை தேனாம்பேட்டை சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் ஜி.ராஜாராம், தி.நகர்- மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்கியம்மாள், வடபழனி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் உள்பட 21 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT