Published : 26 Mar 2017 09:10 AM
Last Updated : 26 Mar 2017 09:10 AM
தொழில்நுட்ப புரட்சியால் தினமும் பல புதுமைகள் வந்தவண்ணம் உள்ளன. எந்த அளவுக்கு புதுமைகள் மீது தற்கால தலைமுறையினருக்கு ஈர்ப்பு உள்ளதோ அதே அளவுக்கு பழைமைகள் மீதும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது காலச்சக்கர சுழற்சியில் மீண்டும் சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ள கிராமபோன்களை இன்றைய தலைமுறையினர் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த காலத்தில் கிராமபோன்களும், அவற்றை வைத்திருப்பவர்களும் சமுதாயத்தில் பெரிய கவுரவமானவர்களாக வும், ஹீரோக்களாகவும் பார்க்கப்பட்டனர். ஆனால், இந்த கிராம போன்கள் இன்று பயன்பாடில்லாமல் கவுரவ காட்சிப்பொரு ளாக வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன. பலர் அவற்றின் பெருமையை அறியாமல் வீடுகளில் இடத்தை அடைப்பதாக நினைத்து பழைய இரும்பு பாத்திர வியாபாரிகளிடம் விற்றுவிட்டனர். மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தை, நகர சாலையோர நடைபாதைகளில் விற்பனைக்கு வந்துள்ள இந்த கிராமபோன்களை ரூ.4 ஆயிரம், 3 ஆயிரம் கொடுத்து வாங்கிச் சென்று இன்றைய தலைமுறையினர் வீடுகளில் அலங்காரப் பொருளாக வைக்கின்றனர். ஒரு காலத்தில் ஒரு ஊரையை தனது இசையால் கட்டிப்போட்ட கிராமபோன்கள், இன்று நினைவுச்சின்னமாகிவிட்டன.
இதுகுறித்து திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் ஓ.முத்தையா கூறியதாவது: மின்னணு இசை கருவிகளில் முதலில் மக்களை கவர்ந்தது ரேடியோ. அதில் பாட்டு கேட்பது எல்லோருக்கும் பிடித்தமானது. ஆனால், ரேடியோவில் எப்போதாவது ஒரு முறைதான் பாட்டு கேட்க முடியும். தொடர்ந்து பாடல்கள் கேட்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் கிராமபோன்.
அதில் ரேடியோவைபோல் இல்லாமல் இசைத்தட்டுகளை பயன்படுத்தி பாடல் களை திரும்ப திரும்ப கேட்கலாம். ஆனால், இந்த கிராமபோனை அந்த காலத்தில் வசதியான செல்வந்தர்களின் வீடுகளில் மட்டுமே பார்க்க முடியும். இந்த தலைமுறையினர், குழந்தைகளாக இருந்தபோது எப்படி பொதிகை டிவியில் ‘ஒளியும் ஒலியும்’ நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக, டிவி வைத்திருப்போர் வீடுகளில் தவம் கிடப்பார்களோ, அதுபோல கடந்த தலைமுறையினர் கிராமபோன் வைத்திருப்பவர்களுடைய வீடுகளில் அந்த காலத்தில் இசையை கேட்க காத்திருப்பார்கள். அப்படி அன்று மக்களுடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக கிராமபோன் இருந்தது. அந்த காலத்தில் கீற்றுக் கொட்டகைகளில் வெளியிடப்படும் படங்ளை விளம்பரப்படுத்துவதற்காக அந்த படங்களின் பாடல்களை இந்த கிராமபோன்களை ஊர் ஊராக வண்டிகளில் வைத்து இசைத்தபடியே விளம்பரப்படுத்துவார்கள். கிராமபோன் செல்லும் வண்டிகள் பின்னால் சிறுவர்கள் கூச்சலிட்டபடியே செல்வார்கள்.
அப்படி ஒரு ஊரையே இசையால் கட்டிப்போட்ட கிராமபோன்கள், இன்று பாடாமல் காட்சிப்பொருளாகி வீடுகளின் அலங்காரப் பொருளாகிவிட்டன என்றார்.
பழமைக்கு எப்போதுமே மவுசு
மதுரையில் கிராமபோன்களை விற்க வந்த கேரள மாநிலம் கோழிக்கோடை சேர்ந்த சபீர் கூறும்போது, “கிராம போன்கள் 1962-க்கு அப்புறம் விற்பனைக்கு வருவது நின்றுபோனது. கிராமபோனுக்கு அடுத்து ரேடியோ டேப் ரிக்கார்டு, சிடி, டிவிடி வரை வந்துவிட்டது. கிராமபோன் வாங்கு வோரில் 100-க்கு 99 சதவீதம் பேர் பழைய காலத்து ஞாபகத்துக்காக வாங்கி செல்கின்றனர். ஒரு சதவீதம் பேர்தான் பயன்படுத்த வாங்குகின்றனர். அதில் பாட்டு கேட்க போடப்படும் இசைத்தட்டுகள் பழைய சந்தைகளில் கிடைக்கிறது. கிராம போன்களை அறிந்தவர்கள் மட்டுமே அவற்றை வாங்குவார்கள். அதனை வாங்க வருவோரைவிட அதை வேடிக்கை பார்க்கவும், விவரம் கேட்க வருவோரும் அதிகமாக இருக்கின்றனர். திருச்சி, மதுரை, கோவை, சென்னை, புதுச்சேரி போன்ற நகரங்களில் இந்த கிராம போன்களை விற்க சென்றுள்ளேன். மதுரையில் பழமைக்கு எப்போதுமே மவுசு இருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT