Published : 08 Jun 2016 05:50 PM
Last Updated : 08 Jun 2016 05:50 PM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்னியாகுமரி - காஷ்மீர், கிருஷ்ணகிரி - சென்னை , கிருஷ்ணகிரி - பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி - குப்பம், ஓசூர் - சர்ஜாபூர் ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலைகள் செல்கிறது.
இந்த சாலைகளில் நிமிடத்திற்கு சராசரியாக 7 வாகனம் என்ற விகிதத்தில் வாகனங்கள் செல்கின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கி.மீ. வேகத்துக்கும் அதிகமாகத் தான் அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்படுகிறது.
பெரும்பாலான விபத்துகள் சாலை விதிகள் மீறுதல், மதுபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டுதல் போன்ற சம்பவங்களால் நிகழ்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயமடைபவர்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். ஆனால், இங்கிருந்து பெரும்பாலானவர்கள் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். வெளி மாவட்ட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் போதே நோயாளிகள் பலர் இறந்து விடுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உயர்தர மருத்துவமனை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் காயம் அடைபவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். அவ்வாறான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தாண்டி, மருத்துவமனைக்கு உள்ளே வருவதற்கே குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிறது. இங்கு வந்ததும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சையளிக்கின்றனர். உடன் மருத்துவர்கள் மேல்சிகிச்சைகாக தருமபுரி, சேலம் மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்கின்றனர். மேல்சிகிச்சைகாக செல்லும் பலர், வழியிலேயே உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதே போல், அவசர சிகிச்சை பிரிவில் போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக காயம் அடைபவர்கள் சிகிச்சை பெற 11 படுக்கைகள் உள்ளது. கடந்த 3ம் தேதி மேலுமலையில் நடந்த விபத்தில் காயம் அடைந்த பலருக்கு தரையில் படுக்க வைத்தே மருத்துவர்கள் சிகிச்சை அளித்த அவலநிலையை காண முடிந்தது.
விபத்தில் காயம் அடைபவர்களை காப்பாற்றக் கூடிய அந்த பொன்னான நேரம் இங்கு வீணாகிறது. 5 தேசிய நெடுஞ்சாலைகள் சங்கமிக்கும் கிருஷ்ணகிரி, ஓசூரில் நகரங்களில் அனைத்து வசதிகளையும் கொண்ட, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை துவக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT