Published : 19 Oct 2013 11:49 AM
Last Updated : 19 Oct 2013 11:49 AM
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி நான்கு கட்ட போராட்டத்தை அறிவித்திருக்கிறது சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம்.
இந்த ஆண்டிற்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது, ‘தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் நடப்பு லாபத்தில் செயல்பட்டு வருகின்றன’ என்று பெருமையுடன் அறிவித்தார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு. இதையடுத்து, தங்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு இருக்கும் என ஆவலோடு எதிர்பார்த்தார்கள் அந்த வங்கிகளின் ஊழியர்கள்.
ஆனால், 7.6.13-ல், 19 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 15 முதல் 20 சதவீதமும், சிவகங்கை, தஞ்சை, நீலகிரி, நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 7 சதவீதமும் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார். இந்த நான்கு மாவட்ட வங்கிகளின் ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு பாதியாக குறைக்கப்பட்டதற்கு அந்த வங்கிகள் குவிப்பு நட்டத்தில் இயங்குவதாக காரணம் சொல்லப்பட்டது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அந்த வங்கிகளின் ஊழியர்கள், ’’இந்த நான்கு வங்கிகளும் முன்பு நட்டத்தில் இயங்கியது உண்மைதான். அதைத்தான் குவிப்பு நட்டம் என்கிறார்கள். கூட்டுறவு வங்கிகளை மறுசீரமைப்பு செய்வதற்காக வைத்தியநாதன் கமிட்டியால் அறிவிக்கப்பட்ட தொகையை மத்திய - மாநில அரசுகள் வழங்கிவிட்டாலே இந்த குவிப்பு நட்டம் ஈடு செய்யப்பட்டுவிடும். இந்த ஆண்டில் நீலகிரி மாவட்ட வங்கி 61 சதவீதமும், தஞ்சை வங்கி 51 சதவீதமும், சிவகங்கை வங்கி 67 சதவீதமும், நெல்லை வங்கி 101 சதவீதமும் நிதிநிலையின் நிகர மதிப்பில் உயர்வு கண்டிருக்கின்றன.
2009-ம் ஆண்டில் பாதாளத்தில் இருந்த இந்த வங்கிகளின் நிகர மதிப்பை கடந்த நான்கு வருடங்களில் குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தி இருக்கிறோம். ஆனால், இதையெல்லாம் முதல்வரின் பார்வைக்கு போகாமல் மறைத்து விட்டார்கள். அதனால்தான் பாரபட்சமான ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறார் முதல்வர்.
முந்தைய ஆட்சியில் கொடுக்கப்பட்டதை விடவும் கூடுதலாக ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் கவனமாக இருந்திருக்கிறார். ஆனாலும், ஒரு சில அதிகாரிகள் உண்மையை மறைத்துவிட்டார்கள். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வான ஊதிய உயர்வால் மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களை விடவும் சுமார் 30 சதவீதம் அளவுக்கு ஊதியத்தில் பின் தங்கி நிற்கிறோம்’’ என்றனர்.
இதுகுறித்து பேசிய சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் உதவிப் பொருளாளருமான ஆர்.எம்.கணேசன், ’’ஊதிய உயர்வில் முதல்வரிடம் அதிகாரிகள் உண்மைகளை மறைத்திருப்பது குறித்து கடந்த 3.9.13-ல் முதல்வருக்கு கடிதம் எழுதினோம். அதற்கு பதிலேதும் இல்லை.
எனவே அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் ஒரே மாதிரியான ஊதிய உயர்வை அமல்படுத்தக் கோரி முதல் கட்டமாக அக்டோபர் 23-ம் தேதி சிவகங்கையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அடுத்ததாக 30-ம் தேதி கறுப்புச் சட்டை அணிந்து பணிக்கு வருவோம். அதற்கும் தீர்வில்லை என்றால், நவம்பர் 7-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம். கடைசியாக, நவம்பர் 18-லிருந்து மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தம் செய்வது என முடிவெடுத்திருக்கிறோம்’’ என்றார் அவர்.
முந்தைய ஆட்சியில் கொடுக்கப்பட்டதை விடவும் கூடுதலாக ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் முதல்வர் கவனமாக இருந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT