Published : 21 Jun 2016 02:32 PM
Last Updated : 21 Jun 2016 02:32 PM
யோகா பயிற்சிகளால் இளைய தலைமுறையினரிடம் ஒழுக்கம், மனித நேயத்தை வளர்க்க முடியும் என்கிறார் 81 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் 109 வயது யோகா பயிற்சியாளர் குருசாமி.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (109). நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பொன்னையா செட்டியார் யோகா நிலையத்தில் சிறுவர்கள், இளைஞர்களுக்கு சுமார் 40 ஆண்டுகளாக யோகா பயிற்சியை இலசமாக கற்றுத் தருகிறார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். தற்போது ஞானமணி என்ற மகன் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 81 ஆண்டுகளாக யோகாசனங்கள் செய்து வரும் குரு சாமி, வயது முதிர்வு காரணமாக கடந்த ஓராண்டாகப் பயிற்சி மையத் துக்குச் சென்று பயிற்சி அளிப்பதை நிறுத்தியுள்ளார். ஆனாலும், வீட்டில் தினமும் யோகாசனத்துக்காக சிறிது நேரம் ஒதுக்கி பயிற்சி செய்து வருகிறார்.
இது குறித்து யோகா ஆசிரியர் குருசாமி கூறியதாவது:
நான் நெசவுத் தொழிலாளி. யோகாசனங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டபோது, முறை யாக யோகாசனங்களைக் கற் றுக்கொடுத்தவர் கீழப்பட்டி தெரு வைச் சேர்ந்த கோபால் என்ற எனது குருநாதர். ஆசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. ஆனால், முறையான பயிற்சி, அதை கற்றுத்தரும் ஆட்களும் இல்லாததால் பல ஆசனங்கள் மறக்கப்பட்டுவிட்டன.
சிறியவர்கள் முதல் பெரியவர் கள் வரை அனைவரும் யோகாச னங்களை முறையாக கற்று தினமும் பயிற்சி செய்யலாம். குறிப்பாக பெண்கள், இளம் பெண்கள் யோகாசன பயிற்சிகளை தினமும் செய்வது மிக நல்லது. அது உடலுக்கு வலிமையையும், சுறுசுறுப்பையும், ஆற்றலையும் தரும்.
ஆரோக்கியமாக வாழ மருத்துவம் மட்டும் போதாது. முறையான உடற்பயிற்சி, ஆசன ங்கள் செய்வது அவசியம். யோகாசனங்களை பள்ளியில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. இத னால் மாணவர்களின் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். அத்துடன் யோகா பயிற்சிகளால் இளைய தலைமுறையினரிடையே ஒழுக்கம், மனித நேயம் வளர்க்க முடியும் என்றார் யோகா ஆசிரியர் குருசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT