Published : 09 Jun 2016 12:41 PM
Last Updated : 09 Jun 2016 12:41 PM
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்த கடந்த 10 நாட்களில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நான்காவது முறையாக சிறைபிடித்துள்ளனர்.
தமிழகத்தில் கிழக்கு கடற்கரைப் பகுதிகளான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக். நீரிணை கடல்களில் மீன்களின் இனப்பெருக்கக் காலமாகக் கணக் கிட்டு ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன்பிடி தடைக் காலம் அறிவிக்கப்படுகிறது. இதனால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.
மீன்பிடி தடைக் காலம் முடிவடைந்து கடந்த பத்து நாட்களாக விசைப் படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர். முதல் நாளான மே 30 திங்கட்கிழமை அன்று ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறை பிடிக்கப்பட்டு வவுனியா சிறையிலும், ஜுன் 2-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டணம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை சிறைபிடித்து யாழ்ப்பாணம் சிறையிலும், ஜுன் 5 கடலுக்குச் சென்ற ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்து யாழ்ப்பாணம் சிறையிலும் அடைத்தனர்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜுன் 7 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் அவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதும், கடத்திச் செல்வதும் நடக்கிறது. இது தொடர்பாக பலமுறை கடிதம் மூலம் தங்கள் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன்.
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்களின் உரிமையை இலங்கையிடம் ராஜதந்திர முறைப்படி மத்திய அரசு நிலைநிறுத்த வேண்டும். மேலும், அப்பாவி தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொடர் ஆபத்துகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும், எனக் கோரியிருந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேசுவரம் விசைப்படகுத் துறைமுகத்திலிருந்து 725 விசைப் படகுகளில் 425 படகுகளுக்கு டோக்கன் பெற்று 300க்கும் குறைவான படகுகளே கடலுக்குச் சென்றன. இதில் தலைமன்னார் அருகே வியாழக்கிழமை அதிகாலை தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சிங்கம் என்பவரின் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மகேந்திரன், மாரிகணேசன், கருப்பச்சாமி, வினு, பாஸ்கரன், மூசா ஆகிய 6 மீனவர்களை எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட 6 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் நீதிபதி அலெக்ஸ் ராஜா கிரேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு ஜுன் 14 வரையிலும் நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
45 நாட்கள் மீன்பிடி தடைக்குப் பின்னர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற பத்து நாட்களில் அடுத்தடுத்த 5 சம்பவங்கள் மூலம் 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்திருப்பதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT