Published : 27 Dec 2013 12:00 AM
Last Updated : 27 Dec 2013 12:00 AM

சென்னையில் மெட்ரோ ரயிலுக்காக புதிதாக 3 துணை மின் நிலையங்கள்

மெட்ரோ ரயில் இயக்கத்துக்காகவும் வடசென்னை புதிய மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்கவும் சென்னையில் 3 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சென்னை மாநகருக்கு தினமும் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைவில் முடிவுக்கு வந்து, முதல்கட்டமாக வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் இயக்கம், பணிமனை மற்றும் மெட்ரோ ரயில் தொழில்நுட்பக் கூடப் பணிகள் ஆகியவற்றுக்கு தினமும் 300 முதல் 800 மெகாவாட் வரை கூடுதலாக மின்சாரம் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வடசென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலா 600 மெகாவாட் திறனுடன் கொண்ட இரண்டு அலகுகள் கொண்ட 1,200 மெகாவாட் மின் நிலையம், விரைவில் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்க உள்ளது. தற்போது இந்த மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சீராக விநியோகிக்கவும், மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தேவைப்படும் அதிக மின்சாரத்தை வழங்கவும் சென்னை நகரில் கூடுதலாக துணை மின் நிலையங்கள் மற்றும் மின்னூட்டி பாதைகள் தேவைப்படுகின்றன.

இதைக் கருத்தில்கொண்டு திருமங்கலம், புளியந்தோப்பு மற்றும் திருவேற்காடு ஆகிய பகுதிகளில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது திருவேற்காட்டில் 230/110 கே.வி. திறனில் ஒரு துணை மின் நிலையமும் திருமங்கலத்தில் 110/33/11 கே.வி. திறனில் ஒரு துணை மின் நிலையமும் புளியந்தோப்பில் 400/230 கே.வி. திறனில் ஒரு துணை மின் நிலையமும் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 22-ம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கட்டுமான நிறுவனம் இறுதி செய்யப்படும்.

பின்னர் பணிகள் துவங்கி அதிகபட்சம் ஓராண்டுக்குள் துணை மின் நிலையப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதுவரை மற்ற துணை மின் நிலையங்கள் மூலம், மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படும். புதிய துணை மின் நிலையங்கள் வந்ததும் சென்னையில் குறைந்த மின்னழுத்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

சென்னையைப் பொறுத்தவரை, மின் வாரியத்தின் துணை நிறுவனமான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் 47 துணை மின் நிலையங்களும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் 168 துணை மின் நிலையங்களும் தற்போது செயல்பாட்டில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x