Published : 19 Mar 2014 01:19 PM
Last Updated : 19 Mar 2014 01:19 PM
மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 5-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விளக்கும் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி நடை பெற்றது.
அப்போது அரசியல் கட்சிகள் தரப்பில் பேசும்போது தலைவர்களின் பிறந்த நாள் விழாவை ஒரு மாத காலத்துக்கு கொண்டாடுவது வழக்கம். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பிறந்தநாள் விழாக்களில் பேனர்கள், கொடிகள், தோரணங்களை வைத்தால், வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கில் சேருமா என்ற கேள்வி எழுப்பியிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன், வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, புதிய வங்கி கணக்கு ஒன்றைத் தொடங்க வேண்டும். அன்று முதல், அவரது தேர்தல் செலவுகள், கணக்கில் வைக்கப்படும். அதுவரை செய்யப்படும் செலவுகள் வேட்பாளர் செலவு கணக்கில் வராது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட கட்சிகளான அதிமுக, திமுக ஆகிய கட்சிகள், தங்கள் வேட்பாளர்களுடன் களமிறங்கி, பல வாகனங்களில், மக்களவைத் தொகுதியை வலம் வந்து வாக்கு சேகரித்து வருகின்றன.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் தேரடி அருகில், கட்சியின் வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரிக்க செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் வந்தார். இதற்காக, ஸ்டாலின் வரும் வழியான காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில் ஆங்காங்கே டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொடிகள் நடப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த துணை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் திமுகவினர் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த பேனர்களையும், கொடிகளையும் தேர்தல் பிரிவு சார்பில், வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கில் சேரும் என்று தேர்தல் அதிகாரிகள், திமுகவினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அரசியல் கட்சிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திமுக பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, “ஆட்சியர் பாஸ்கரன் அனைத்து கட்சி கூட்டத்தில் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு அவர் செய்யும் பிரச்சார செலவுகள் அவரது கணக்கில் சேர்க்கப்படும் என்றார். துணை தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பு மனு தாக்கல் செய்யாவிட்டாலும் பிரச்சார செலவுகள் வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்கின்றனர். தேர்தல் விதிமுறைகள் குறித்து எங்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT