Published : 21 Sep 2016 01:02 PM
Last Updated : 21 Sep 2016 01:02 PM
புதுச்சேரியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் இருசக்கர வாகன வாடகை நிலையங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆட்டோ கட்டணத்தைக் குறைந்தபட்சம் ரூ.40 ஆகவும், ஒரு கி.மீ.க்கு ரூ.20 எனவும் நிர்ணயிக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.ஜிபிஆர்எஸ் மீட்டர்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, புதுச்சேரி மாநில அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டுப் போராட்டக் குழு அறிவித்தது.
இதனிடையே செவ்வாய்க்கிழமை மாலை போராட்டக் குழு உறுப்பினர்களை அழைத்து முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் அறிவித்தபடி இன்று புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
என்ஆர் காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. திமுக, காங்கிரஸ், ஐஎன்டியூசி தொழிற்சங்கங்கத்தினர் பங்கேற்கவில்லை. ஆட்டோக்கள் வேலை நிறுத்தத்தினால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், அவசர தேவைக்கு பயன்படுத்துவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் ஊர்வலம்
இதனிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ தொழிலாளர்கள் ஏஎப்டி மைதானத்தில் தங்களின் ஆட்டோக்களை அணிவகுத்து நிறுத்திவிட்டு, கூட்டுப்போராட்டக்குழுத் தலைவர் சேதுசெல்வம் தலைமையில் அங்கிருந்து மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை வழியாக புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT