Published : 09 Oct 2014 08:28 AM
Last Updated : 09 Oct 2014 08:28 AM
நடிகர் ரஜினியை பாஜகவுக்கு இழுப்பதில் அந்தக் கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஹைதரபாத்தில் இருக்கும் ரஜினியிடம் பாஜக தலைவர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ரகசிய கருத்து கேட்பு நடந்துவருவதாக தெரிகிறது.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். அவர் பாஜகவில் சேர்ந்தால் மிகுந்த மகிழ்ச்சி என அக்கட்சியின் நிர்வாகிகள் வெளிப்படையாக அழைப்பு விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கொலு விழாவை காரணமாக வைத்து ரஜினி வீட்டுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ரஜினியின் மனைவி லதாவுடன் சுமார் ஒரு மணி நேரம் அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார். இந்த செய்தி முதன்முதலில் ‘தி இந்து’வில் வெளியானது. இதைத் தொடர்ந்து ரஜினி பாஜகவில் சேருவாரா அல்லது தனிக்கட்சி தொடங்குவாரா என்பது குறித்து பலத்த விவாதங்கள் நடந்துவருகின்றன.
தற்போது ‘லிங்கா’ படப்பிடிப் புக்காக ஹைதராபாத்தில் இருக்கும் ரஜினியுடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போனில் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய பாஜக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது:
ஏற்கெனவே அமித்ஷா 3 முறை ரஜினிகாந்திடம் பேசியிருக்கிறார். ரஜினி தரப்பில் இருந்து அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. ‘காலம் கனியட்டும்’ என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். அதனால்தான் ‘நீங்கள் எதிர்பார்த்த காலம் கனிந்துவிட்டது; உடனடியாக அரசியலுக்கு வாருங்கள்’ என்று இப்போது ரஜினியிடம் பாஜக மேலிடம் வலியுறுத்தி வருகிறது.
முதல்வர் வேட்பாளர்?
குறிப்பாக, பிரதமர் மோடி இதில் ஆர்வமாக இருக்கிறார். அவரது உத்தரவுப்படியே அமித்ஷா, போனில் ரஜினியிடம் பேசியுள்ளார். ‘தனிக்கட்சி தொடங்கினாலும் பாஜக ஆதரவு அளிக்கும். ஆனால், நீங்கள் பாஜகவில் இணைவதையே நாங்கள் விரும்பு கிறோம். எப்படியாக இருந் தாலும் முதல்வர் வேட்பாளர் நீங்கள்தான்’ என்று அமித் ஷா கூறியுள்ளாராம். ரஜினியும், ‘படப் பிடிப்பு முடியட்டும்; உறுதியான பதில் சொல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு அந்த நிர்வாகிகள் கூறினர்.
இதைத் தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றங்களின் மூத்த நிர்வாகிகளிடம், ‘தனிக்கட்சி தொடங்கலாமா அல்லது பாஜக வில் சேரலாமா’ என்று ரஜினி தரப்பிலிருந்து ரகசியமாக கருத்து கேட்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “மன்றத்தின் பொறுப்புகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும்படி உத்தரவு வந்திருக்கிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற புள்ளி விவரங்களை தயார் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். தலைவர் தனிக்கட்சி தொடங்கலாமா அல்லது முதல்வர் வேட்பாளர் என்று முன்னிறுத்துவதால் பாஜகவில் இணையலாமா என்றும் கேட்டுள்ளனர்” என்றனர்.
கருத்துக் கேட்பு பணிகள்
கருத்துக்கேட்பு பணிகளை பெங்களூரில் இருக்கும் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் கவனித்துக்கொள்வதாக ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினியின் சகோதரர் களுடன் நெருங்கிய தொடர்புடைய கர்நாடக மாநில ரஜினி ரசிகர் சேவா சங்கத் தலைவரான ரஜினி முருகனிடம் கேட்டபோது, “இருவிதமாக கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஒன்று, அமித்ஷா போனில் பேசினார் என்கிறார்கள். இன்னொன்று, மும்பையில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது என்கிறார்கள். ஆனால், தலைவர், அமித்ஷாவிடம் பேசினார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. சமீபத்தில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இருந்து வந்த ரசிகர்களை பொறுமையாக சந்தித்தார் ரஜினி. ஒரேநாளில் நான்காயிரம் பேருக்கு தனது போட்டோவை விநியோகித்தார். தலைவர் காரணம் இல்லாமல் இப்படி செய்யமாட்டார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT