Published : 25 Feb 2017 10:09 AM
Last Updated : 25 Feb 2017 10:09 AM
பண அட்டைப் பரிவர்த்தனையில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக் கத்தைக் குறைக்க இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டது ‘ரூபே’ கார்டு. ‘ரூபே’ என்பது ரூபாய் மற்றும் வழங்குதல் (பேமென்ட்) என்ற வார்த்தைகளின் கூட்டினால் கிடைக்கும் வார்த்தையாகும்.
அமெரிக்க நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறு வனங்களின் பணப் பரிவர்த்தனை அட்டைகளை மட்டுமே மொத்த உலகமும் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு தனது சொந்த முயற்சியில் ‘ரூபே’ என்னும் உள்நாட்டு பணப் பரிவர்த்தனை அட்டையை இந்திய வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
31.7 கோடி ‘ரூபே’ கார்டுகள்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் ஜன் தன் கணக்குகள் மற்றும் புதிய கார்டு வாங்குபவர்களுக்கு ‘ரூபே’ டெபிட் கார்டுகளைத்தான் வழங்குகின்றன. பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ‘ரூபே’ கார்டு பயன்பாடு 7 மடங்கு உயர்ந்துள்ளதாக நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் (என்சிபிஐ) தெரிவித்துள்ளது.
வரும் டிசம்பர் மாதத்துக்குள் ‘ரூபே’ கார்டுகள் மூலமாக 50 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயத்திருப்பதாகவும், இதுவரை 31.7 கோடி ‘ரூபே’ கார்டுகள் வழங்கப்பட்டிருப்பதாக வும், இதில் ஜன் தன் வங்கி கணக்குக்காக 20.5 கோடி ‘ரூபே’ கார்டுகள் வழங்கப்பட்டிருப்ப தாகவும் என்சிபிஐ நிர்வாக இயக்கு நர் ஏபி ஹூடா தெரிவித்திருக்கிறார்.
ஆனால் நடைமுறையில் என்னவோ தலைகீழாக உள்ளது. பொருள் வாங்கும்போது பெரும் பாலான இடங்களில் பாயின்ட் ஆப் சேல் மூலம் பணம் செலுத்த ‘ரூபே’ டெபிட் கார்டுகள் சரிவர செயல்படுதில்லை என ‘ரூபே’ டெபிட் கார்டுதாரர்கள் கூறுகின்ற னர். மாணவர்கள் அரசுப் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள கட்ட ணங்களை ‘ரூபே’ கார்டை பயன் படுத்தி ஆன்லைன் மூலமாக செலுத்த முடியவில்லை என்கின்ற னர்.
கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் மூலம் சேவைப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெங்கடேஷ் என்பவரிடம் இதுபற்றி கேட்டபோது, “பெரும் பாலான ஆன்லைன் பேமென்டுக்கு ‘ரூபே’ கார்டை பயன்படுத்த முடியவில்லை. ஆனால் மின் கட்டணம் செலுத்த முடிகிறது” என்றார்.
விருத்தாசலத்தில் இணைய சேவையில் ஈடுபட்டுவரும் மீனா கூறும்போது, “ஆன்லைன் மூலம் அரசுப் போட்டித் தேர்வு கட்டணம், ரயில் மற்றும் பேருந்து முன்பதிவு போன்றவற்றுக்கு ரூபே டெபிட் கார்டை பயன்படுத்தும்போது, பின் நம்பர் உள்ளீடு செய்த பிறகும் பரிவர்த்தனை நிகழ்வதில்லை” என்கிறார்.
விசா அல்லது மாஸ்டர் கார்டு
இதற்கான காரணம் குறித்து வங்கி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, “ரூபே கார்டில் இந்த சிக்கல் உள்ளது என்று நிறைய வாடிக்கையாளர்களிடம் புகார் வருகிறது. அவர்களிடம் ‘ரூபே’ இணைய முகவரிக்குச் சென்று ‘ரூபே’ கார்டின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தால் இயங்கும் என அறிவுறுத்தியிருந்தோம். அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கும் சரிவர செயல்படவில்லை என கூறினால், அவர்கள் விரும்பினால் அவற்றை சம்பந்தப்பட்ட வங்கிகளில் திரும்பக் கொடுத்து விசா அல்லது மாஸ்டர் கார்டாக மாற்றிக்கொள்ளலாம்.
விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளுக்கு மாற்றாக ‘ரூபே’ கார்டு வழங்க மத்திய அரசு வலியுறுத்தியதால், பெரும்பாலான வங்கிகள் ‘ரூபே’ கார்டுகளை வழங்கியுள்ளன. இந்தக் குறை பாட்டை என்சிபிஐ நிறுவனம் சரிசெய்ய முடியும்” என்கின்றனர்.
மார்ச் மாதத்துக்குள் தீர்வு
இது தொடர்பாக அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியாளர்கள் சம்மேளத்தின் துணைத் தலைவர் மருதவாணன் கூறும்போது, “ரூபே கார்டில் சில தொழில்நுட்பப் பிரச்சினைகள் உள்ளன. சில நேரங்களில் இணைய வழியில் உள்ள கோளாறுகளாலும் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு மார்ச் மாதத்துக்குள் தீர்வு கிடைத்துவிடும்” என்றார்.
கடலூர் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி பொதுமேலாளர் ஆண்ட்ரூ ஐயா சாமி கூறும்போது, “கார்டிலோ அல்லது இணையதளத்தில் சில நேரங்களில் ஏற்படும் கோளாறு களினால்தான் இதுபோன்று பிரச் சினை எழ வாய்ப்பு உண்டு. மற்றபடி அனைத்து பரிவர்த்தனைக்கும் இதைப் பயன்படுத்தலாம். புகார் வந்தால் பாதிப்புக்குள்ளாவோரின் கார்டை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT