Published : 13 Nov 2014 10:33 AM
Last Updated : 13 Nov 2014 10:33 AM
நோக்கியா ஆலையில் பணிமுறிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருக்கும் ஊழியர்கள், நோக்கியா தொழிலாளர் சங்கத்தினைக் கைப் பற்றி போராட்டத்தினைத் தொடர முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில், அவர்களுக்கான காலக்கெடு முடிந்துவிட்டதால் இனி செட்டில்மென்ட் தொகை வழங்கு வதில் சிக்கல் இருக்கும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில் வளாகத்தில் இயங்கி வந்த நோக்கியா செல்போன் ஆலை யில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், கடந்த மே மாதத்தில் 5 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற்றனர். மீதம் இருந்தவர்களில் பெரும்பாலா னோர், பணிமுறிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டனர். ஆனால், இன்னமும் சிலர் அதற்கு உடன்பட மறுத்து எதிர்ப்புத் தெரி வித்து வருகின்றனர். அவர்கள், நோக்கியா தொழிலாளர் சங்கத்தி னைத் தங்கள்வசம் எடுத்துக் கொண்டு போராட்டத்தை முன்னெ டுக்கப் போவதாகத் தெரிவித்துள் ளனர். அவர்களை முன்னின்று வழிநடத்தும் வீரா, ‘தி இந்து’ நிருபரிடம் நேற்று கூறியதாவது:
நோக்கியா நி்ர்வாகத்தின் பணிமுறிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், தொழிலா ளர் சங்கத்தில் அந்த ஊழியர்கள் மேற்கொண்டு நீடிக்கமுடியாது. சங்கத்தினை கலைக்கவும் முடியாது. இனிமேல் ஆலை விவகாரத்துக்கும் அவர்களுக்கு தொடர்பு இல்லை. பணிமுறிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத 150 பேர்தான் சங்கத்தினை நடத்தத் தகுதியானவர்கள். அதனால், அச்சங்கத்தின் தலைவராக செயல் பட்டுவந்த சரவணகுமாரிடம் இன்று பேசியுள்ளோம். விதிகளின்படி, ஆலையில் பணியில் நீடிப்பவர்களே சங்கத்தினை நடத்த வேண்டும் என்று அவரிடம் சொல்லியிருக்கிறோம்.
அரசியல் கட்சிகளைப் பொருத்த வரையில் இப்போது எங்களுக்கு பெரிய அளவில் யாரும் ஆதரவு தரவில்லை. இந்த சங்கம் மார்க்சிஸ்ட் கட்சியின் சிஐடியுவுடன் இணைக்கப்பட்டதாகும். பணி் முறிவு ஒப்பந்தம் தங்கள் கொள்கை களுக்கு எதிரானது என்றும், ஆலையில் பணியில் தொடர வேண்டும் என்று போராடினால், ஆதரவு தருகிறோம் என்று மார்க்சிஸ்ட் தரப்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவர்களையும் அணுக முடிவு செய்திருக்கிறோம்.
நோக்கியாவில் முதலில் தொழிற்சங்கத்தினை தொடங்கிய (பின்னர் கலைத்துவிட்டனர்) திமுக-வின் தொழிலாளர் முற்போக்கு சங்க மூத்த பிரதிநிதிகள் கூறுகையில், “ஒரு தொழிற் சங்கத்தினை குறிப்பிட்ட சிலர் கைப்பற்ற முடியாது. சங்கத்தின் பொதுக்குழு கூடி, மூன்றில் ஒரு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்,” என்றனர்.
பொதுவாகவே, முன்னெச் சரிக்கையாக, கூடுதலாக ஓரிரு சங்கங்களின் பெயர்களைத் தொழிலாளர்கள் பதிவு செய்திருப் பார்கள். அதில் ஏதேனும் ஒரு பெயரைத் தேர்வு செய்து சங்கத்தை நடத்தலாம் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து நோக்கியா தொழிலாளர் சங்கத் தலைவர் சரவணகுமார் கூறியதாவது:-
சங்கவிதிகளின்படி, பெரும் பான்மையினரின் அனுமதியைப் பெற்று பணிமுறிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். எனினும், அதன்பிறகு சங்கத்தினை ஒரு சிறிய குழுவிடம் ஒப்படைக்கமுடியாது. சங்கத்தின் விதிமுறைகளிலும் அதற்கு வழியில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டாலும், நான் மற்ற தொழிலாளர்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார். இதற்கிடையே, மே மாதம் விருப்ப ஓய்வுபெற்ற 5 ஆயிரம் தொழிலாளர்களில் ஒரு சாரார், தங்களுக்குக் கூடுதல் இழப்பீடு தரக்கோரி நிர்வாகத்தை அணுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிர்வாகம் கருத்து
இது குறித்து நோக்கியா இந்தியா நிர்வாகத்தினர் கூறியதா வது: அனைத்து தொழிலாளர்களுக் கும் பணி விடுவிப்பு ஆணை அனுப்பி விட்டோம். இன்னமும் 96 பேர் மட்டும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லை. நாங்கள் விதித்த நவம்பர் 10 காலக் கெடு முடிந்ததால், அவர்களுக்கு செட்டில்மென்ட் தொகை இனி கிடைப்பது சற்று சிரமம். எனினும் ஓரிரு நாளுக்குள் வந்தால் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நாங்கள் நிதியை நீண்ட காலத்துக்கு வைத்திருக்கமுடியாது. நோக்கியா உயரதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆடிட்டர்களும் கேள்வி கேட்பார்கள்.
தொழிலாளர் சங்கத்தை இவர்கள், சட்டரீதியாக மட்டுமே கைப்பற்ற முடியும். தொழி லாளர் துறையை அணுகி அதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும். அதேநேரத்தில் தற்போதைய நிர்வாகிகள், சங்கத் தைக் கலைக்கவும் விதிகளில் இடம் இருக்கிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT