Published : 01 Jan 2014 12:00 AM
Last Updated : 01 Jan 2014 12:00 AM

நம்மாழ்வார் மறைவு: தலைவர்கள் இரங்கல்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா: வேளாண்துறையில் பணிபுரிந்து வந்த நம்மாழ்வார், ரசாயன உரங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப் பணியையே துறந்தவர். இயற்கையை காக்க இடிமுரசு போல் முழங்கிக் கொண்டிருந்த நம்மாழ்வார், இயற்கை எய்தியது ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.): பூச்சிக் கொல்லிகள், மரபணு மாற்று விதைகள், மீத்தேன் எரிவாயு எடுத்தல், விளைநிலங்களை மாற்றி பயன் படுத்துதல் போன்றவற்றுக்கு எதிராக போராடிய, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்த தினத்தை, இயற்கை விவசா யத்தின் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): இயற்கைக்கும் விவசாயத்துக்கும் நம்மாழ்வார் செய்த பணிகள் ஒப்பற்றவை. அவரது மறைவால் விவசாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை ஏற்படுகிறது.

வைகோ (மதிமுக): நம்மாழ்வார் உடலால் மறைந்தாலும், விவசாயிகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க அவர் தந்த அறிவுரைகளாலும் தொலைநோக்கு திட்டங்களாலும் நம்மோடு வாழ்கிறார். அவர் ஏந்திய வேளாண்மை லட்சியக் கொடியை உயர்த்தி, அவரது கனவுகளை நனவாக்க உறுதி கொள்வோம்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): நம்மாழ்வாரின் நிலைபாட்டில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். விவசாயிகளின் நலனில் அவருக்கு இருந்த அக்கறையும் இயற்கை விவசாயத்தில் இருந்த அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டத்தக்கது.

தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): நம்மாழ்வார் உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று, இயற்கை விவசாயம் குறித்த அனுபவங்களைத் திரட்டி, அதை தமிழகத்தில் செயல் முறைப்படுத்திக் காட்டினார். வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலனுக்காகவே அர்ப்பணித்தவர் நம்மாழ்வார்.

எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் (ம.ம.க.): தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை மலடாக்கும் மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், நம்மாழ்வார் உயிர் பிரிந்துள்ளது. அவருடைய மறைவு இயற்கை வேளாண் உலகுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் பேரிழப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x