Published : 01 May 2014 09:43 AM
Last Updated : 01 May 2014 09:43 AM
தமிழகத்தில் மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் என பல்வேறு உள்ளாட்சிப் பதவிகள் காலியாக உள்ளன. இதனால் விரைவில் மீண்டும் ஒரு தேர்தலை மக்கள் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 2011-ம் ஆண்டு தேர்தல் நடத்தப் பட்டது. இதன்மூலம் மேயர், துணை மேயர், கவுன்சிலர், மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு பல ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தாலோ அல்லது இறந்துவிட்டாலோ அடுத்த 6 மாதத்துக்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால் அவ்வாறு செய்யாததால் மாநிலத்தில் பல உள்ளாட்சிப் பதவிகள் காலியாக உள்ளன.
ராஜினாமா செய்தவர்கள்
2012-ம் ஆண்டு நடைபெற்ற சங்கரன்கோவில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடு வதற்காக நகராட்சித் தலைவராக இருந்த முத்துச்செல்வியும், புதுக் கோட்டை சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதன் நகராட்சித் தலைவராக இருந்த கார்த்திக் தொண்டமானும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுவதற்காக அதிமுக வைச் சேர்ந்த திருநெல்வேலி மேயர் விஜிலா சத்யானந்த், தூத்துக்குடி மேயர் சசிகலா புஷ்பா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
அதன்பின் தற்போது மக்க ளவைத் தேர்தலில் போட்டியிடு வதற்காக பலர் கடந்த மாதம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த பதவிகளுக்கான பொறுப்பில், துணை நிலையில் இருந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களால் வழக்கமானப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியுமே தவிர, புதிதாக எதையும் செயல்படுத்த இயலாது. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதால் 2 ஆண்டுகளாக காலியாக உள்ள பதவிகளுக்கு உடனே மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
மீண்டும் தேர்தல்
இதுபற்றி தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘உள்ளாட்சி பதவிகளுக்கு 6 மாதத்துக்குள் மீண்டும் தேர்தல் நடத்தியாக வேண்டும். ஆனால், அரசு உரிய காரணங்களைத் தெரிவித்து இந்த காலகட்டத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். மக்க ளவைத் தேர்தல் பணிகள் இன்னும் முடியவில்லை. இதற்கு பின்னரே உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவெடுக்க முடியும்’ என்றனர்.
எப்படியாயினும், இன்னும் சில மாதங்களுக்குள் தமிழகத்தின் பல மாவட்ட மக்கள் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தேர்தலை முடிவு செய்யும் மக்களவை ‘முடிவு’
தற்போது மக்களவைத் தேர்தல் நடந்து முடிவு வர இருக்கிறது. இதில் அதிமுகவுக்கு சாதகமான முடிவுகள் வெளியானால், விரைவிலேயே உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அவ்வாறு இல்லாதபட்சத்தில் மீதமுள்ள நாள்களுக்கு தற்போதுள்ள ‘பொறுப்பாளர்களே’ தொடர வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சுகள் அடிபடுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT