Published : 04 Feb 2017 09:44 AM
Last Updated : 04 Feb 2017 09:44 AM

மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததால் தமிழகத்தின் இரட்டை ரயில் பாதை திட்டப்பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு

மத்திய பொது பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய ரயில் பாதை, அகலப் பாதை திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக மக்களின் கனவு திட்டமான இரட்டை பாதை திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்காததால் பணிகளில் மேலும் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொது பட்ஜெட்டில் இருந்து பிரித்து 1924-ம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 92 ஆண்டுகளாக தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் இந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட் டுடன் இணைந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரயில்வே பட்ஜெட்டுக்கு மாநில வாரியாக நிதி எவ்வளவு என் பதை மட்டுமே முதல்கட்டமாக கடந்த 1-ம் தேதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு ரூ.2,287 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.2,064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்பது தொடர்பாக நேற்று மாலை ரயில்வே வாரியம் வெளியிட்டது.

தமிழகத்தில் தற்போது 9 புதிய வழித்தட பாதை கள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இதில், மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி திட்டத்துக்கு ரூ.100 கோடி, திண்டிவனம் செஞ்சி திருவண்ணாமலை திட்டத்துக்கு ரூ.19 கோடி, திண்டிவனம் நகரி திட்டத் துக்கு ரூ.47 கோடி, ஈரோடு பழனி, சென்னை மகாபலி புரம் கடலூர் ஆகிய திட்டங் களுக்கு தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கு மிகவும் குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி நாகூர் காரைக் கால், வேளாங்கண்ணி திருத் துறைப்பூண்டி, காரைக்கால் பேரலம் ஆகிய திட்டங்களுக்கு ரூ.40 கோடியும், செங் கோட்டை புனலூர் திட்டத் துக்கு ரூ.41 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை போடிநாயக்கனூர் திட்டத்துக்கு ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கோயம்புத்தூர், மயிலாடுதுறை திருவா ரூர், மன்னார்குடி பட்டுக் கோட்டை, தஞ்சாவூர் பட்டுக் கோட்டை திட்டங்களுக்கு ரூ.244 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

சென்னை கன்னியாகுமரி இரட்டை வழி பாதை என்பது கனவு திட்டமாக இருக்கிறது. தற்போது சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இரட்டை வழிப் பாதை பணி முடிந்துள்ளது. இத்திட்டத்தின் விரிவாக்கமாக விழுப்புரம் திண்டுக்கல் வரை இரட்டை வழிப் பாதை அமைக்கும் பணி முடியும் நிலையில் உள் ளது. மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை இரட்டை பாதை பணிகளை மேற் கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. விழுப்புரம் திண்டுக்கல் திட்டத்துக்கு ரூ.1 கோடியும், தாம்பரம் செங்கல்பட்டு 3-வது பாதை திட்டத்துக்கு ரூ.12 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மணியாச்சி நாகர்கோவில், மதுரை மணியாச்சி ஆகிய திட்டங்களுக்கு தலா 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஆர்இயு உதவி தலைவர் இளங்கோ வன் கூறும்போது, ‘‘மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டுக் கான வரவு, செலவு அறிக்கை வெளியாமல் இருக்கிறது. கடந்த ஆண்டில் பட்ஜெட்டின் போது ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

தமிழகத்தில் பல ஆண்டு களாக எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் இரட்டை பாதை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இத னால், இரட்டை பாதை திட்டப் பணிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

தமிழகத்துக்கு ரூ.2,287 கோடி

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய பொதுபட்ஜெட்டில் இந்த ஆண்டு தெற்கு ரயில்வேக்கு ரூ.3,593 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழக ரயில் திட்டங்களுக்கு ரூ.2,287 கோடியும், கேரளாவுக்கு ரூ.1,206 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 39 சதவீதம் அதிகமாகும். அதேபோல், தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களை மேம் படுத்துவதற்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15.15 சதவீதம் அதிகமாகும்.

மேலும், 19 இடங்களில் சுரங்கப்பாதைகள் அமைக்கப் படவுள்ளன. 9 இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும் அமைக்கப்படுகிறது. விழுப்புரம் கடலூர் துறைமுகம் மயிலாடுதுறை தஞ்சாவூர், மயிலாடுதுறை திருவாரூர் வழித்தடங்களில் 228 கி.மீ தூரம் ரூ.251 கோடி செலவில் மின்மயமாக்கும் பாதைகளாக மாற்றப்படும். அதேபோல், பெங்களூர் ஓசூர் ஓமலூர் வழித்தடமும் ரூ.152 கோடி செலவில் மின்மயமாக்கும் பாதைகளாக மாற்றப்படும். பெருநகர போக்குவரத்து திட்டமிடல் பணிக்கு ரூ.14 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x