Published : 20 Jan 2017 09:09 AM
Last Updated : 20 Jan 2017 09:09 AM

ஜல்லிக்கட்டு நிர்வாகிகள் டெல்லி பயணம்: சுற்றுச்சூழல் துறை அமைச்சரை சந்திக்க அவசர ஏற்பாடு

தமிழக ஜல்லிக்கட்டு அமைப்பு நிர்வாகிகள் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்டுள்ளனர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்களால் கடந்த 4 நாட்களாக தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் முன்னெடுத்துச் செல்லும் இந்த போராட்டம், தற்போது ரயில் மறியல், கடையடைப்பு என தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை தமிழக ஜல்லிக்கட்டு அமைப்பு நிர்வாகிகளுக்கு டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக வீர விளையாட்டு மீட்புக் கழக தலைவர் ராஜேஷ் நேற்று கூறியதாவது:

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் அழைப்பின் பேரில், வீர விளையாட்டு மீட்புக் கழகம், ஜல்லிக்கட்டு பேரவை, அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் விழா கமிட்டி நிர்வாகிகள் டெல்லி செல்கிறோம்.

நாளை (இன்று) 11 மணிக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அப்போது சுமூக உடன்பாடு ஏற்படும் என்ற நம்பிக்கையிருக்கிறது. இந்த ஆண்டே ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x