Published : 20 Jan 2017 11:20 AM
Last Updated : 20 Jan 2017 11:20 AM
ஜல்லிக்கட்டு காளைகளை திறந்துவிட வாடிவாசலை திறந்து விட்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிட்டு வீட்டு வாசலைத் திறப்போம் என அலங்காநல்லூரில் மக்களின் வைராக்கிய போராட்டம் தொடர்கிறது.
அலங்காநல்லூரில் நேற்று 4-வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை முதலே சுற்றுவட்டார கிராம மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் அலைஅலையாக அலங்காநல்லூரில் திரளத் தொடங் கினர். வாடிவாசல் சாலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பீட்டா அமைப்புக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசலை திறக்கக் கோரியும் கோஷமிட்டனர். அலங்காநல்லூர், சுற்றுவட்டார கிராம மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் சீருடையுடன், அவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர்.
அலங்காநல்லூர் மக்கள் கடந்த 4 நாட்களாக எந்த வேலைக்கும் செல்லாமல், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பாமல், வீடுகளில் அடுப்பை பற்றவைக்காமல் மனம் தளராமல் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.
நேற்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், டெல்லியில் பிரத மரை சந்தித்தபின் அங்கேயே முகாமிட்டு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், அலங்காநல்லூர் வாடிவாசலை இளைஞர்கள் நெருங்காமல் இருக்க, போலீ ஸார் வழக்கத்துக்கு மாறாக அதிகமானோர் குவிக்கப்பட்டி ருந்தனர். போலீஸார் நெருக்கடி, ஆட்சியர் வேண்டுகோள் என போராட்டத்துக்கு ஒருபுறம் நெருக்கடி ஏற்பட்டாலும், அலங் காநல்லூர் மக்கள் ஒருமித்த குரலில், வாடிவாசலை திறந்தால் மட்டுமே, போராட்டத்தைக் கைவிட்டு வீட்டு வாசலை திறக்க செல்வோம்’’ என போராடுவதால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் போராட்டம் முடிவுக்கு வர வாய்ப்பில்லை.
நேற்று முன்தினம் வரை அலங்காநல்லூரை மட்டுமே மையம் கொண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், நேற்று பாலமேடு சுற்றுவட்டார பதினெட்டுபட்டி கிராமங்களிலும் பரவி அங்குள்ள மக்கள், அவர்களாகவே, இருக்கிற இடத்திலேயே உண்ணாவிரதம், மறியலில் ஈடுபட்டதால் போராட்டம் மாவட்டம் முழுவதும் பரவியது.
போராட்டத்தில் ஈடுபடுவோரை சோர்வடையாமல் உற்சாகப்படுத்த சாலைகளில் இளைஞர்கள் கரகாட்டம் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் ஜல்லிக்கட்டு வீரத்தை பறைசாற்றும் பாடல்களை பாடிய வண்ணமும், ஆரவாரம் செய்தும் போராட்டத்தில் ஈடு பட்டனர். ஒருபுறம் மக்கள் போராட்டம் அறவழியில் நடந் தாலும், மற்றொருபுறம் நேற்று அலங்காநல்லூர் - மதுரை சாலை, அலங்காநல்லூர் - வலசை, கூடல்நகர், கல்லணை பிரிவு சாலைகளில் சிலர் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக திரும்பிய பக்கமெல்லாம் கிராமங்களில், நகரங்களில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் சாலை மறியல் போராட்டம் தொடர்வதால் மாவட்டத்தின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதி க்கப்பட்டுள்ளது.
ஆட்சியரிடம் முறையிட்ட மூதாட்டி
ஆட்சியர் வந்தபோது கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு மத்தியில் அலங்காநல்லூரைச் சேர்ந்த அழகுபிள்ளை (87) என்ற மூதாட்டி, அவரை நெருங்கி சென்று, அவரது கைகளைப் பிடித்து எங்க ஊர் பசங்கள ஜல்லிக்கட்டு விளையாட விடுங்கய்யா, நான் 2 வயசுல இருந்து பார்த்த விளையாட்டு. இது எங்க ஊர் வீரம் சம்பந்தம்பட்டதய்யா, மூனு வருஷமா இந்த விளையாட்ட பார்க்கல. இனி ஜல்லிக்கட்டை பார்க்காமலே கண்ணை மூடிடுவேனோன்னு பயமாக இருக்கு. நீங்கதாய்யா எப்படியாவது ஏற்பாடு செய்யணும் என்றார்.
கலெக்டரய்யா.. நீங்களும் போராட வாங்க..!
மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் நேற்று முதல் முறையாக அலங்காநல்லூர் போராட்டக் களத்துக்கு வந்தார். அவரை போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், இளைஞர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். அப்போது அலங்காநல்லூர் மக்கள் ஒலிபெருக்கியில், கலெக்டரய்யா நீங்களும் வாங்க, எங்களுடன் போராட. ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், அதை விட்டுக்கொடுக்க முடியுமா? என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தனர். பதிலுக்கு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, போராட்டத்தை அமைதியாக தொடருங்கள், எனக் கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆட்சியர் புறப்பட்டு சென்றதும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பிரதமர் முடியாது என்று சொன்னால் என்ன, ஜல்லிக்கட்டு காளைகளை திறந்துவிட வாடிவாசலை திறந்துவிட்டால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிட்டு வீட்டு வாசலை திறப்போம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT