Published : 03 Jul 2016 01:00 PM
Last Updated : 03 Jul 2016 01:00 PM
திமுகவினர் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் பணியாற்றவில்லை என திமுக மேலிடப் பிரதிநிதியிடம் காங்கிரஸ் வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் திமுக 8 தொகுதிகளில் தோல்வியடைந்தது குறித்து அக்கட்சியின் மேலிடப் பிரதிநிதி வழக்கறிஞர் முத்துக்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் கடந்த மாதம் விசாரணை நடத்தினர். வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணை அறிக்கையை கட்சி மேலிடத்திடம் அளித்தனர். புகார் வராத தொகுதிகள், விசாரணை அறிக்கையில் ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
இதையடுத்து உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் தோல்வி குறித்து 3 நாட்களாக இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்றது. கட்சித் தலைமை வழங்கிய பணத்துக்கு கணக்கு கேட்டது, நிர்வாகிகள், வேட்பாளர்களின் தேர்தல் பணிகள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதில், வேட்பாளர்களும், நிர்வாகிகளும் ஒருவர் மீது மற்றொருவர் மாறி, மாறி புகார்களை அடுக்கினர். அதிமுகவினரிடம் சிலர் பணம் வாங்கிக்கொண்டு பணியாற் றுவதுபோல் நாடகமாடி தோல்விக்கு வழிவகுத்துவிட்டதாகவும் சிலர் மீது புகார் கூறப்பட்டது.
உசிலம்பட்டி தொகுதியில் செல்லம் பட்டி ஒன்றியச் செயலர் உக்கிரபாண்டி தன் மீதான குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்க அனைத்து கிராமங்களில் உள்ள கிளைச் செயலர்களை அழைத்து வந்து மேலிடப் பிரதிநிதி முன் ஆஜர்படுத்தி யார், யாருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என வாக்குமூலம் அளிக்கச் செய்தார். இதனால் இத்தொகுதி திமுக வேட்பாளர் இளமகிழனிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயராமன் பிரதிநிதியிடம் கூறியது:
திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய, நகர் திமுக செயலாளர்கள் நான் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களுக்கு வந்தனர். அதே நேரத்தில் கட்சி வெற்றி பெற வேண்டும் என ஆர்வம், ஈடுபாட்டுடன் தங்கள் பகுதிகளில் அவர்களாகவே தேர்தல் பணியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தைக்கூட கட்சியினரை தேடிச் சென்று வழங்கவில்லை.
அதிமுகவில் போட்டியிட்ட அமைச்சர் உதயகுமாரிடம் திமுகவினர் பணம் பெற்றதாக எனது கவனத்துக்கு புகார் வந்தது. இதற்கான ஆதாரம் என்னிடம் இல்லாததால் இது குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மதுரை வடக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி கேயனும் திமுகவினர் மீது கடுமையான குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.
திருப்பரங்குன்றம், சோழவந்தான் தொகுதி திமுக நிர்வாகிகளிடம் விசாரணை நடந்தது. இங்கும் திமுகவினர் திட்டமிட்டு பணியாற்றாததே தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து நிர்வாகிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.
மதுரை நகரிலுள்ள தொகுதிகளில் ஏற்கெனவே நடந்த விசாரணை அறிக்கை கட்சி தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது புறநகரில் நடந்துள்ள விசாரணை அறிக்கையும் ஓரிரு நாளில் வழங்கப்படவுள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் பெரிய அளவில் நிர்வாகிகள் மாற்றம் இருக்கும் என திமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT