Published : 03 Jan 2014 10:23 AM
Last Updated : 03 Jan 2014 10:23 AM
தமிழகத்தில், 14 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்களாக உருவாக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்படுள்ள அரசு செய்திக் குறிப்பில், பெருமளவில் பெருகி வரும் வாகனங்களினால் போக்குவரத்து துறை, தனது செயல்பாட்டில் புதிய சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, அனைத்து அலுவலகங்களையும் கணினிமயமாக்குதல், புதிய அலுவலகங்களை உருவாக்குதல், போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல், ஒட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகளை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் எளிதாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இந்த வகையில், பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்ற வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்களைக் கட்டவும், ஒட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுத்தளம் அமைக்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தற்போது போக்குவரத்துத் துறையில் உள்ள 137 அலுவலகங்களில் சொந்தக் கட்டடங்களில் 38 ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 4 அலுவலகங்களில் தேர்வுத்தள கட்டுமானப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.
சாலைப் பாதுகாப்பில் வாகன ஓட்டுநரின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டும், சாலை விபத்துக்களை தவிர்க்கும் வண்ணமும், மொத்தமுள்ள 42 போக்குவரத்து ஓட்டுநர் தேர்வுத் தளங்களை கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்களாக மாற்ற முதல்வர் முடிவெடுத்துள்ளார்.
முதற்கட்டமாக திருவண்ணாமலை, நாமக்கல் (வடக்கு), கடலூர், சேலம் (மேற்கு), திண்டுக்கல், திருச்சி(மேற்கு), கரூர், ஈரோடு, மதுரை (வடக்கு), விருதுநகர், கோயம்புத்தூர் (மையம்), திருநெல்வேலி, கிருஷ்ணகிரி மற்றும் சங்ககிரி ஆகிய 14 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்களாக உருவாக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மீதமுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளங்களும் படிப்படியாக கணினிமயமாக்கப்படும்.
கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் மூலம் ஓட்டுநர் உரிமத் தேர்வு நடத்தப்படும்போது, தேர்வு முடிவுகள் அனைத்தும் கணினி வரைப்படம் மூலம் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு, திறமையின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் திறமையான ஓட்டுநர்கள் உருவாக்கப்பட்டு, சாலைப் பாதுகாப்பில் தனிக்கவனம்
செலுத்தப்பட்டு வாகன விபத்துக்கள் பெருமளவில் குறைவதற்கு வழிவகை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT