Published : 25 Jul 2016 02:25 PM
Last Updated : 25 Jul 2016 02:25 PM
ரேஷன் கடைகளில், ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதன்மூலம் எழுந்துள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், ரேஷன் கடை விற்பனையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு களைத் தடுக்கவும், காகிதப் பயன்பாடு இல்லாத துறை நடவடிக்கையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ரேஷன் கடைகளில் ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
சோதனை முயற்சியாக அரியலூர், பெரம்பலூர் மாவட் டங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், தற்போது திருச்சி உட்பட வேறு சில மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தக் கருவியில் அந்தந்த ரேஷன் கடைக்குட்பட்ட ரேஷன் கார்டுகளின் விவரங்கள் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் செல்போன், ஆதார் எண்கள் பதிவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத்தொடர்ந்து, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கியதற்கான அனைத்து விவரங்களும் ரேஷன் கார்டுதாரரின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வடிவில் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
சில கடைகளில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் விவரங்களும் பதிவு செய்யப்படவில்லை. இதற்கு, அந்தக் கருவியில் ஸ்டோரேஜ் வசதி போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், விற்பனையாளர்கள் குறிப்பிட்ட அந்த ரேஷன் கார்டுதாரர்களுக்காக தற்போதும் பதிவேடுகளைக் கையாண்டு வருகின்றனர். இதனால், கருவியில் பதிவு செய்வது, பதிவேட்டில் எழுதுவது என்று இரு வேலையைச் செய்ய வேண்டியுள்ளது.
அதேபோல, ரசீது வழங்கப்படாத நிலையில், பெரும்பாலானோர் குடும்பத் தலைவரின் செல்போன் எண்ணையே பதிவு செய்துள்ளதால் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெண்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விலை உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ள முடியவில்லை. இதனால், கூட்ட நெரிசல் நேரங்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் குழப்பம் ஏற்பட்டு, விற்பனையாளர்களுக்கும், ரேஷன் கார்டுதாரருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால், பிரச்சினையைத் தடுக்கும் நோக்கில் சில கடைகளின் விற்பனையாளர்கள் ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் பொருட்களைப் பதிவு செய்வதுடன், துண்டுச் சீட்டிலும் பொருட்களின் விவரங்களை எழுதித் தர வேண்டிய நிலை உள்ளது. இதனால், இங்கும் 2 வேலையை விற்பனையாளர்கள் செய்ய வேண்டியுள்ளது. இதனால், மேலும் தாமதம் ஏற்படுகிறது.
கட்டம் கட்டமாக எஸ்எம்எஸ்…
இதுதொடர்பாக விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, “கருவியில் போதிய ஸ்டோரேஜ் வசதி இல்லாததால் சில ரேஷன் கார்டுதாரர்களை பதிவு செய்ய முடியவில்லை. இது குறித்து தகவல் கொடுத்துள்ளோம். கருவியை அளித்த நிறுவனத்தினர் வந்து ஸ்டோரேஜ் கார்டை மாற்றித் தரும் வரை சிலருக்கு பதிவேட்டில் பதிவு செய்துதான் ஆக வேண்டும். அதேபோல, தமிழ் எழுத்துரு இல்லாத செல்போன்களுக்கு தெளிவாக இல்லாமல், கட்டம் கட்டமாக எஸ்எம்எஸ் வருவதாகக் கூறுகின்றனர். அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். இதை வைத்தும் சிலர் பிரச்சினை செய்கின்றனர்” என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.வேலுமணியிடம் கேட்டபோது, “ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில்தான் ரேஷன் கடை களில் ‘பாயின்ட் ஆப் சேல்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது 13 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். ஏனெனில், விற்பனையாளர்கள் அனைவரும் திறம்பட செயலாற்றுவார்கள் என்று கூற முடியாது.
தற்போது அளிக்கப் பட்டுள்ள கருவியைக் காட்டிலும் அதிநவீன கருவி விரைவில் பயன்படுத்தப்படவுள்ளது. அந்தக் கருவியைக் கையாளவும் விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. சிறிது சிறிதாக அனைத்துப் பிரச்சினைகளும் முற்றிலும் களையப்பட்டுவிடும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT