Published : 18 Feb 2014 07:17 PM
Last Updated : 18 Feb 2014 07:17 PM
சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகமாவதால் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியும் வறண்ட ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்தும் பணியும் தீவிரமாக நடக்கிறது.
சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11057 மில்லியன் கனஅடி. இப்போது 3459 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4739 மில்லியன் கனஅடி நீர் இருந்தது.
பருவமழை பொய்த்ததால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே போகிறது. சென்னை குடிநீர் தேவைக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீரைத்தான் நம்பியிருக்கும் நிலை உள்ளது.
ஏரிகளில் நீர் குறைவாக இருப்பதால், சென்னையில் ஒருநாள்விட்டு ஒருநாள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சில பகுதிகளில் ஒருவாரத்துக்கு ஒருமுறைதான் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுவதாக பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர். ஏராளமானோர் குடிநீருக்கு ஆழ்குழாய் கிணற்றைத்தான் (போர்வெல்) நம்பியுள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் இறங்கிக்கொண்டே போவதால் பல ஆழ்குழாய் கிணறுகள் நீரின்றி வற்றிவிட்டன.
இதனால், ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்தும் பணி தீவிரமாகியுள்ளது. காசு கொடுத்து லாரி தண்ணீர் வாங்குவது வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் அதிகரிக்கும். இந்த ஆண்டில் பிப்ரவரியிலேயே ஆரம்பித்துவிட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு குறித்து சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்த ஆர்.அசோக்குமார் என்பவர் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் 8, 9, 10-வது குறுக்குத் தெருக்களில் வீடுகளுக்கு குழாயில் குடிநீர் வந்து 3 மாதங்களாகிவிட்டன. இப்போதைக்கு வராது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.
வேறு வழியில்லாமல் லாரி தண்ணீர் வாங்கி தரைமட்டத் தொட்டியை நிரப்புகிறோம். சென்னைக் குடிநீர் வாரியத்திடம் 9 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீர் ரூ.600-க்கு கிடைக்கிறது. இந்த குடிநீர் கிடைக்காதபோது, தனியாரிடம் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ரூ.2,500-க்கு வாங்குகிறோம். வீட்டில் உள்ள 200 அடி ஆழ ஆழ்குழாய் கிணறு வற்றிவிட்டதால், அதை ஆழப்படுத்த வேண்டியுள்ளது’’ என்றார்.
ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிழக்கு பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கூறும்போது, ‘‘ரூ.65 ஆயிரம் செலவு செய்து 350 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு போட்டேன். ஒருசொட்டு தண்ணீர்கூட வரவில்லை. வெறும் புழுதிதான் வந்தது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT