Published : 28 Feb 2014 10:00 AM
Last Updated : 28 Feb 2014 10:00 AM

சக்கர நாற்காலி இல்லாததால் அவதிப்படும் மாற்றுத் திறனாளிகள்: புதிய காவல் ஆணையர் அலுவலகத்தில் அவல நிலை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்கர நாற்காலி இருந்தும் அதை பயன்படுத்தாமல் இருப்பதால் புகார் கொடுக்க வரும் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகின்றனர். சென்னை வேப்பேரியில் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் கடந்த அக்டோபர் முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு புகார் கொடுக்க வரும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக சாய்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அலுவலக வாசலில் இருந்து உள்ளே செல்ல சக்கர நாற்காலியும் புதிதாக வாங்கி வைக்கப்பட்டுள்ளது. அதை இதுவரை பயன்படுத்தவில்லை. கட்டிடத்துக்குள் நுழைய 7 படிகள் ஏறிச் செல்லவேண்டும் என்பதால், மாற்றுத் திறனாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சென்னை மாம்பலத்தைச் சேர்ந்தவர் சாரதா. பல கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி கோயிலுக்கு தானமாக கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். போரூர் அருகே காட்டுப்பாக்கத்தில் இவரது நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது குறித்து புகார் கொடுக்க ஆணையர் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தார். சக்கர நாற்காலி இல்லாததால் சிரமப்பட்டு படியேறினார்.

சென்னை திரிசூலத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. போலியோவால் பாதிக்கப்பட்ட இவர் ஒரு சான்றிதழ் வாங்க காவல் ஆணையர் அலுவலகம் வந்தபோது படிகளில் கால்களை நீட்டி உட்கார்ந்து ஒவ்வொரு படியாக கஷ்டப்பட்டு ஏறியது பரிதாபமாக இருந்தது. பல்லாவரம் அருகே திருநீர்மலையை சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபு, என்.ஓ.சி சான்றிதழ் வாங்க வந்திருந்தார். சிரமப்பட்டு படியில் ஏறிய அவரை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்.

சக்கர நாற்காலி இருந்தும் ஏன் பயன்படுத்துவது இல்லை என்று கேட்டதற்கு, ‘‘சக்கரங்கள் உடைந்துவிட்டன. இன்னும் சரிசெய்யவில்லை’’ என்றார் ஒரு போலீஸ்காரர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x