Published : 20 Jun 2015 12:27 PM
Last Updated : 20 Jun 2015 12:27 PM
தமிழகத்தில் உற்பத்தியாகும் பட்டுக் கூடுகளின் விலை பாதியாக குறைந்துள்ளதால் இத்தொழிலை நம்பியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டுநூல் இறக்குமதிக்கான வரி 10 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள்.
தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் பாலக்காட்டில் உள்ள மத்திய பட்டு வாரியம் ஆகியவை விற்பனை செய்யும் பட்டுப்பூச்சி முட்டைகளை, ‘ஜாக்கி’கள் எனப்படும் முகவர்கள் வாங்கி பட்டு புழுக்களாக விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். விவசாயிகள் தங்கள் நிலங்களில் மல்பெரி செடிகளை புழுக்களின் உணவுக்காக சாகுபாடி செய்து, பட்டுக்கூடுகள் மூலம் பட்டு உற்பத்தி செய்கின்றனர். வெண்பட்டு மற்றும் மஞ்சள் பட்டு என்ற இரு ரகங்களை கொண்ட பட்டுக் கூடுகளை கோவை, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட அரசு விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்கின்றனர்.
இந்த பட்டுகூடுகளின் விலை சமீபகாலமாக தொடர்ந்து சரிந்து வருவதால் பட்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு ரூ 450 முதல் 500 வரை விலை போன ஒரு கிலோ வெண்பட்டு கூடு தற்போது ரூ 250 முதல் 300 வரை விற்பனையாகிறது. மஞ்சள் பட்டுக்கூட்டின் விலை ரூ 200-க்கும் கீழே சரிந்துள்ளது.
சீனாவில் இருந்து பட்டு நூல் அதிகளவில் இறக்குமதியாவதும், முறைகேடாக எடுத்து வருவதும் உள்ளூர் பட்டு கூடு விற்பனை விலை குறைய காரணமாக கூறுகின்றனர் விவசாயிகள். பட்டு நூல் இறக்குமதிக்கு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 40 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்ட நிலையில் அது படிப்படியாக குறைந்து 15 சதவீதமானது.
தற்போதைய மத்திய அரசு அதனை 10 சதவீதமாக குறைத்துள்ளதாக கூறும் விவசாயிகள், சீனாவில் இருந்து முறைகேடாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு நூல் இந்தியாவிற்கு கடத்தப்படுவதையும் அரசு கண்டுகொள்வதில்லை என்று குற்றச்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பட்டு வளர்ச்சி விவசாயிகள் சங்க தலைவர் சண்முக சுந்தர மூர்த்தி கூறும்போது, பட்டுக்கூடு வளர்ப்பு என்பது மிக கடினமான தொழில் என்பதால் இதனை மேற்கொள்ளும் விவசாயிகள் குறைந்து வருகின்றனர்.
தற்போது பட்டுக்கூடுகள் விற்பனை விலை குறைந்து வருவதால் மேலும் பல விவசாயிகள் இந்த தொழிலை கைவிடும் சூழல் ஏற்படும். இப்பிரச்சினையை தீர்க்க பட்டு கூடுகளை அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். இறக்குமதி வரியை அதிகரிப்பதோடு, முறைகேடாக பட்டு நூல் இந்தியாவிற்குள் வருவதையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
எஞ்சியிருக்கும் விவசாயிகளும் பட்டுகூடு உற்பத்தியை கைவிடும்பட்சத்தில், பட்டு உற்பத்திக்கு வெளிநாட்டு பட்டு நூல் இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்புள்ளது. உள்நாட்டில் உற்பத்தியாகும் பட்டுகூடுகளின் விலை பாதியாக குறைந்துள்ள நிலையில், பட்டு ஜவுளிகளை பொறுத்தவரையில் எவ்வித விலைமாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT